

சென்னை,
தற்போது ‘பேங்’ என்ற புதிய அதிரடி திரைப்படத்தில் அர்ஜுன் நடித்துள்ளார். டி.எஸ்.ஆர். பிலிம்ஸ், மொபின் புரொடக்ஷன் மற்றும் சமீர் புரொடக்ஷன்ஸ் சார்பில் எம்.டி. சலார் பெய்க் தயாரித்துள்ள இப்படத்தை எஸ்.எஸ். சமீர் இயக்கியுள்ளார்.
தமிழ் திரையுலகில் ஆக்ஷன் கதைகளுக்கு பெயர் பெற்றவர் நடிகர் அர்ஜுன். இவரது படங்களில் இடம்பெறும் சண்டைக் காட்சிகளும், அதிரடி சாகசங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வகையில், மீண்டும் ஒரு ஆக்ஷன் கதையம்சம் கொண்ட புதிய படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
சமீபத்தில் அர்ஜுன்நடிப்பில் வெளியான ‘பிளாஸ்ட்’ திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதைத் தொடர்ந்து, தற்போது ‘பேங்’ என்ற புதிய அதிரடி திரைப்படத்தில் நடித்துள்ளார். டி.எஸ்.ஆர். பிலிம்ஸ், மொபின் புரொடக்ஷன் மற்றும் சமீர் புரொடக்ஷன்ஸ் சார்பில் எம்.டி. சலார் பெய்க் தயாரித்துள்ள இப்படத்தை எஸ்.எஸ். சமீர் இயக்கியுள்ளார். இதில் அர்ஜுனுக்கு ஜோடியாக குட்டி ராதிகா நடித்திருக்கிறார்.
மேலும், அர்ச்சனா கவுதம், சோனி சிரிஸ்டா, ஜே.டி. சக்ரவர்த்தி, ராம் ஜெகன், கே. விஸ்வநாத், சமீர், அசோக்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அமீர்லால் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுபாஷ் இசையமைத்துள்ளார்.
படத்தின் கதைக்களம் குறித்து படக்குழுவினர் கூறியதாவது: கோடிக்கணக்கான ரூபாய் பணத்தைக் கொள்ளையடிக்க ஒரு கும்பல் திட்டமிடுகிறது. அந்தக் கொள்ளை முயற்சியைத் தடுத்து நிறுத்துவதற்காக அர்ஜுன் களமிறங்குகிறார். இதையடுத்து நடைபெறும் அதிரடி சம்பவங்களும், எதிர்பாராத திருப்பங்களும் படத்தின் மையக்கதையாக அமைந்துள்ளன. படத்தில் அதிரடி காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக விலை உயர்ந்த கார்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மும்பை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ‘பேங்’ திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.