நடிகர் ரவி மோகன் வீட்டுக்கு ஜப்தி நோட்டீஸ் ஒட்டிய வங்கி அதிகாரிகள்..காரணம் என்ன?

பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் அவரது தரப்பில் பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. 'ஜெயம்' படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். எம் குமரன் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், பேராண்மை, தனி ஒருவன் போன்ற பல வெற்றி படங்கள் கொடுத்து தனக்கென ஒரு இடத்தை திரைத்துறையில் பிடித்துள்ளார். இவர் நடித்த 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து, வெளியான 'இறைவன், சைரன்' படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்தநிலையில், கடந்த ஆண்டு தனது வாழ்க்கையில் அதிரடி முடிவு எடுத்த ஜெயம் ரவி முதலில் தனது பெயரை ரவி மோகன் என மாற்றினார். பின் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்து நிறைய பேருக்கு அதிர்ச்சி கொடுத்தார். சமீபத்தில் பெரிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்து தான் தயாரிப்பாளராக களமிறங்கி இருப்பதாக அறிவித்தார்.
இந்தநிலையில், நடிகர் ரவி மோகன் மீது டச் கோல்ட் யுனிவர்சல் என்ற தயாரிப்பு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடுத்தது. அதில், கடந்த ஆண்டு செப்டம்பரில் 2 படங்களில் நடிக்க ரவி மோகன் ஒப்பந்தம் செய்ததாகவும், முதல் படத்திற்கு முன்பணமாக 6 கோடி ரூபாய் வழங்கியதாகவும், ஆனால் தங்களது நிறுவனத்தின் படத்தில் நடிக்காமல் வேறு நிறுவனத்தின் படங்களில் நடித்து வருவதாகவும் தெரிவித்திருந்தது.
எனவே, சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ரவி மோகனுக்குச் சொந்தமான ஈசிஆர் பங்களாவை ஜப்தி செய்து அதன் மூலம் தாங்கள் வழங்கிய முன்பணத்தைத் திரும்பப் பெறவும் தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை விடுத்தது. இதனிடையே, சம்பந்தப்பட்ட பங்களா தனியார் வங்கியில் கடன் பெற்று வாங்கியதும், அதற்கான தவணை தொகையை ரவி மோகன் சரியாக கட்டவில்லை என்பதும் தெரியவந்தது.
பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் அவரது தரப்பில் பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 11 மாதங்களாக கடன் தொகையை செலுத்தாததால், தனியார் வங்கி நிர்வாகம் சார்பில் 3 அதிகாரிகள் ரவி மோகனின் வீட்டில் ஜப்தி நோட்டீஸை ஒட்டிச் சென்றனர். ரவிமோகன் தற்போது அந்த வீட்டுக்கு செல்வது இல்லை என்று கூறப்படுவதால், ரவி மோகனின் அலுவலகத்திலும் இந்த நோட்டீஸ் ஒட்ட உள்ளதாக கூறி அதிகாரிகள் சென்றனர்.
இதன்மூலம் ரவி மோகனுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவர் உடனடியாக வங்கிக்கான மாதாந்திர இஎம்ஐ தொகையை செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் அந்த பங்களாவை தனியார் வங்கி வசம் சென்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் ரவி மோகன் வீட்டில் வங்கி அதிகாரிகள் ஜப்தி நோட்டீஸ் ஒட்டி சென்ற சம்பவம் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






