

மூணாறு,
சத்யசிவா இயக்கத்தில் உறியடி விஜய் குமார் புதிய படமொன்றில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு 'அறிவு' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதற்கு டி. இமான் இசையமைக்கிறார். இதில் கதாநாயகியாக கயல் ஆனந்தி நடித்துள்ளர்.
மோட்டிவ்ட்ரோன் புரொடக் ஷன் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிக்கும் இப்படம் பெண்களின் உரிமைகள், சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பெண்களின் வலிமை ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இதனால், ‘அறிவு’ திரைப்படம் ஒரு முக்கியமான சமூகச் செய்தியை எடுத்துரைக்கும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் மூணாறு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. அங்குள்ள ஒத்தப்பாறை பகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் படப்பிடிப்பு நடந்தபோது, அந்தப் பள்ளியில் மாணவர்களுக்கு போதிய வசதிகள் இல்லாதது தெரியவந்தது.
அதனை தொடர்ந்து, தயாரிப்பாளர் சாய்வினோத் ஜெயக்குமார் உடனடியாக அந்த பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை முன்னெடுத்தார். பள்ளி முழுவதும் மறு சீரமைப்பு பணி, மாணவர்களுக்கான குடிநீர் வசதி மற்றும் அவர்கள் தினசரி கல்வி பெற தேவையான அடிப்படை வசதிகளும் முழுமையாக வழங்கப்பட்டன.