ஹிட் இல்லாமலேயே டாப் ஹீரோக்களுக்கு ஜோடி... திரையுலகை வியக்க வைக்கும் நடிகை

சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் 'சேயோன்' திரைப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
ஹிட் இல்லாமலேயே டாப் ஹீரோக்களுக்கு ஜோடி... திரையுலகை வியக்க வைக்கும் நடிகை
Published on

சென்னை,

ஒரு பெரிய வெற்றி படம் இல்லாமலேயே தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்புகளை பாக்யஸ்ரீ போர்ஸ் பெற்றிருக்கிறார்.

இளம் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ்

திரையுலகில் ஒரு நடிகை முன்னணி நட்சத்திரமாக உயர வேண்டுமெனில், தொடர்ச்சியாக வெற்றி படங்களை வழங்க வேண்டும் என்பதே முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆனால், இளம் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் விஷயத்தில் அந்த கணக்குகள் முற்றிலும் மாறியுள்ளன. இதுவரை பெரிய வெற்றிப்படங்களைகொடுக்காதபோதிலும், அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை பெற்று வருகிறார்.

அறிமுகத்திலேயே கவனம்

ரவி தேஜாவுக்கு ஜோடியாக நடித்த 'மிஸ்டர் பச்சன்' திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமான பாக்யஸ்ரீ போர்ஸ், தனது கவர்ச்சி மற்றும் நடனத் திறமையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி

அதன்பிறகு, விஜய் தேவரகொண்டாவுடன் 'கிங்டம்' படத்திலும், ராம் பொத்தினேனியுடன் 'ஆந்திரா கிங் தாலுகா' திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்தார். இந்த இரண்டு படங்களும் பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை.

கோலிவுட், மோலிவுட்டிலும் கால்பதிப்பு

தெலுங்கை தொடர்ந்து தற்போது தமிழ் மற்றும் மலையாள திரையுலகிலும் பாக்யஸ்ரீ போர்ஸ் கவனம் செலுத்தி வருகிறார். கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் 'சேயோன்' திரைப்படத்தில் அவர் கதாநாயகியாக நடித்து வருகிறார். அதேபோல், மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் 'எல்367' திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகிலும் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெற்றிக்கு முன்பே உயர்ந்த எதிர்பார்ப்பு

ஒரு பெரிய வெற்றி படம் இல்லாமலேயே தென்னிந்தியாவின் மூன்று முக்கிய திரையுலகிலும் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்புகளை பெற்றிருப்பது பாக்யஸ்ரீ போர்ஸ் மீது திரையுலகம் வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. அடுத்தடுத்து வெளியாகவுள்ள அவரது படங்கள், அவரை முன்னணி கதாநாயகிகளின் பட்டியலில் இணைக்குமா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com