"என்னை மட்டும் இல்லை... எந்த ஹீரோயினையும் அப்படி சொல்லாதீங்க’’ - பாக்யஸ்ரீ போர்ஸ் உருக்கம்

பாக்யஸ்ரீ போர்ஸின் 'லெனின்' திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
பாக்யஸ்ரீ போர்ஸ்
Published on

சென்னை,

தொடர்ச்சியான படத் தோல்விகளால் தன் மீது எழுந்த விமர்சனங்கள் குறித்து நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் மனம் திறந்து பேசியுள்ளார்.

ரசிகர்களை கவர்ந்த நடிகை

'மிஸ்டர் பச்சன்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான பாக்யஸ்ரீ போர்ஸ், அதனை தொடர்ந்து 'காந்தா', 'கிங்டம்', 'ஆந்திரா கிங் தாலுகா' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

தொடர் தோல்வி... விமர்சனங்கள்

இருப்பினும், இந்த படங்கள் எதுவும் வணிக ரீதியாக பெரிய வெற்றியை பெறவில்லை. இதன் காரணமாக, பாக்யஸ்ரீ போர்ஸ் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானார்.

'லெனின்' படத்திற்கு நல்ல வரவேற்பு

இந்த நிலையில், தற்போது அவர் நடித்துள்ள 'லெனின்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து நடந்த படத்தின் வெற்றி விழாவில் பேசிய பாக்யஸ்ரீ போர்ஸ், தனது மனவேதனையை வெளிப்படுத்தினார்.

"ஒரு படத்தின் வெற்றியையும் தோல்வியையும் பற்றிய என்னுடைய பார்வை மற்றவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டது. ஒரு நடிகையாக நான் ஏற்கும் கதாபாத்திரத்திற்கு முழு நியாயம் செய்வதே வெற்றி. ஆனால் பலர் படத்தின் வசூலையே வெற்றியின் அளவுகோலாக பார்க்கிறார்கள்.

நான் சரியாக நடிக்கவில்லை என்றாலோ, ஒரு காட்சியை சரியாக வெளிப்படுத்தவில்லை என்றாலோ அல்லது என் நடிப்பு ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்றாலோ, ஒரு நடிகையாக நான் தோல்வியடைந்ததாக ஏற்றுக்கொள்வேன். ஆனால், பாக்ஸ் ஆபீஸ் வசூல் குறைவாக இருந்தால் அது என்னுடைய தோல்வி என்று கூறுவது சரியல்ல" என்றார்.

கதாநாயகியை மட்டும்

மேலும் கூறியதாவது:

"ஒரு படம் தோல்வியடைந்தால் அதற்கு கதாநாயகிகளை மட்டுமே குறை சொல்வது நியாயமற்றது. தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று படங்கள் தோல்வியடைந்தால் உடனே 'துரதிர்ஷ்டசாலி' என்று முத்திரை குத்திவிடுகிறார்கள். நானும் இதுபோன்ற விமர்சனங்களைக் கடந்து வந்திருக்கிறேன். என்னை மட்டுமல்ல, எந்த கதாநாயகியையும் இப்படி விமர்சிப்பது தவறு" என்றார்.

பாக்யஸ்ரீ போர்ஸின் இந்த உருக்கமான பேச்சு, தொடர் தோல்விப் படங்களால் தன் மீது எழுந்த விமர்சனங்கள் அவரை எவ்வளவு ஆழமாக பாதித்துள்ளன என்பதை வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com