

உடுப்பி,
பிரபல கன்னட திரைப்பட நடிகையும், 'பிக்பாஸ்' பிரபலமுமான சுபா பூஞ்சா, தனது காதல் கணவரை பிரிந்து விவாகரத்து கோரி குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த சம்பவம் கன்னட திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சுபா பூஞ்சாவுக்கும், உடுப்பியை சேர்ந்த தொழில் அதிபரும், கன்னட செயற்பாட்டாளருமான சுமந்த் பில்லவா என்பவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் மலர்ந்தது.
இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ந் தேதி இவர்களது திருமணம் சுபா பூஞ்சாவின் சொந்த ஊரான மங்களூருவில் மிக எளிமையான முறையில் நடை பெற்றது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இதில் கலந்துகொண்டனர்.
திருமணமாகி 4 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து, தங்களது திருமண வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் பொருட்டு, நடிகை சுபா பூஞ்சாவும், அவரது கணவர் சுமந்த் பில்லவாவும் பரஸ்பர சம்மதத்தின் அடிப்படையில் விவாகரத்து கோரி பெங்களூருவில் உள்ள குடும்ப கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
கோர்ட்டு நடைமுறைகளின்படி, இந்த விவாகரத்து மனு மீதான விசாரணைக்காக நடிகை சுபா பூஞ்சாவும், சுமந்த் பில்லவாவும் கோர்ட்டு அறிவிக்கும் விசாரணை தேதியில் நேரில் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காதலித்து திருமணம் செய்துகொண்ட இந்த நட்சத்திர தம்பதியினர், பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்துக்கு முற்பட்டிருப்பது அவர்களது ரசிகர்களிடையேயும், கன்னட திரை உலகிலும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.