

மும்பை,
பாலிவுட் பிரபல நடிகர் துஷார் கபூருக்கு தொலைபேசி மூலம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையின் பிரபல பாலிவுட் நடிகராகத் திகழ்பவர் நடிகர் துஷார் கபூர். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொலைபேசியில் மர்ம அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர், தான் சிறையில் இருக்கும் தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த 'ஹாரி பாக்ஸர்' என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும், நடிகரிடம் மிரட்டி பேசிய அந்த நபர், உடனடியாக ரூ. 5 கோடி பணம் தராவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அச்சுறுத்தியுள்ளார்.
இந்த மிரட்டல் அழைப்பினால் அதிர்ச்சியடைந்த துஷார் கபூர், உடனடியாக மும்பை காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில், மும்பை குற்றப்பிரிவு போலீசார் மற்றும் மிரட்டல் தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணையில் இறங்கினர். முதற்கட்டமாக, துஷார் கபூருக்கு வந்த மிரட்டல் அழைப்பின் ஆடியோ பதிவை போலீசார் கைப்பற்றினர்.
போலீசார் தரவுத்தளத்தில் ஏற்கனவே உள்ள பிரபல ரவுடி ஹாரி பாக்ஸரின் அதிகாரப்பூர்வ குரல் மாதிரியுடன் இந்த புதிய ஆடியோவை தொழில்நுட்பக் குழுவினர் ஒப்பிட்டுப் பார்த்தனர். ஆனால், மிரட்டல் விடுத்த நபரின் குரலும், ஹாரி பாக்ஸரின் உண்மையான குரலும் ஒத்துப்போகவில்லை என்பது சோதனையில் தெரியவந்துள்ளது.
குரல் மாதிரி பொருந்தாததால், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் பெயரைப் பயன்படுத்தி நடிகர் துஷார் கபூரை பயமுறுத்திப் பணம் பறிக்க யாரோ மர்ம நபர் திட்டமிட்டு இந்த போலி மிரட்டலை விடுத்துள்ளதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும், சூழலைக் கருத்தில் கொண்டு நடிகர் துஷார் கபூருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மிரட்டல் அழைப்பு எந்த பகுதியில் இருந்து வந்தது, இதன் பின்னணியில் இருப்பவர் யார் என்பது குறித்து சைபர் க்ரைம் போலீசாரின் உதவியுடன் மும்பை குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.