ஆந்திரா உள்ளாட்சி தேர்தலில் பிரசாரம் நிறைவு- நடிகர் பாலகிருஷ்ணா மீது விதிகளை மீறியதாக புகார்

ஆந்திர மாநில உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிரசாரம் நேற்று மாலை நிறைவடைந்தது.
ஆந்திரா உள்ளாட்சி தேர்தலில் பிரசாரம் நிறைவு- நடிகர் பாலகிருஷ்ணா மீது விதிகளை மீறியதாக புகார்
Published on: 

நகரி,

பிரபல தெலுங்கு நடிகரும், இந்துபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பாலகிருஷ்ணா தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.

உள்ளாட்சி தேர்தல்

ஆந்திராவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையொட்டி அனல்பறந்த இறுதிக்கட்ட பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற உள்ளது.

தேர்தலையொட்டி மாநில தேர்தல் ஆணையம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. வாக்குப்பதிவை அமைதியாக நடத்த 36 ஆயிரத்து 351 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதுதவிர, பதற்றமான வாக்குச்சாவடிகளில் டிரோன் கேமராக்கள், கண்காணிப்பு கேமராக்கள் (சி.சி.டி.வி.) மற்றும் வீடியோகிராபர்கள் மூலம் வாக்குப்பதிவு தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை வருகிற நவம்பர் 3-ந்தேதி நடைபெறுகிறது.

நடிகர் பாலகிருஷ்ணா மீது புகார்

இதற்கிடையே, பிரபல தெலுங்கு நடிகரும், இந்துபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பாலகிருஷ்ணா தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. இந்துபுரம் நகரில் உள்ள என்.டி.ஆர். சந்திப்பில் நேற்று மாலை தேர்தல் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பாலகிருஷ்ணா கலந்து கொண்டார்.மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்த நிலையில், அதைக் கவனிக்காமல் பாலகிருஷ்ணா மாலை 5.16 மணி வரை தொடர்ந்து மைக்கில் பிரசாரம் செய்ததாக தெரிகிறது.

இதைத் தொடர்ந்து, தேர்தல் விதிமுறைகளை மீறி கூடுதல் நேரம் பிரசாரம் செய்த நடிகர் பாலகிருஷ்ணா மீது தேர்தல் ஆணையம் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

ரோஜா பிரசாரம்

நகரி, புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நடிகை ரோஜா ஒ.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்காக தீவிரப் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். முன்னதாக சத்திரவாடா என்னும் பகுதியில் இருந்து நகரி ஓம் சக்தி கோவில் வரை மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தினார்.

X