

சென்னை,
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள ‘ஓம்’ திரைப்படம் இன்று (நவம்பர் 20) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியைக் காண ரசிகர்கள் அதிகாலையிலேயே திரையரங்குகளில் குவிந்தனர்.
‘அமரன்’ படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஓம்’ திரைப்படம் தனுஷின் 55-வது படமாகும். வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் சாய் பல்லவி, ஸ்ரீலீலா, மம்மூட்டி, நஸ்ருதீன் ஷா, இந்திரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் செம்மரக் கடத்தல் கும்பலைக் கண்டறியும் ரகசிய நடவடிக்கையை மையமாகக் கொண்டு கதை அமைக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 6 மணிக்கு வெளியான முதல் காட்சியைக் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் திரையரங்குகளுக்குச் சென்றனர். தனுஷ் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், மேளதாளங்களுடன் ஆடிப்பாடியும் பட வெளியீட்டைக் கொண்டாடினர்.
இந்த நிலையில், ‘ஓம்’ திரைப்படத்தில் நடித்துள்ள நடிகை ஸ்ரீலீலா மற்றும் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் ஆகியோர் படத்தின் முதல் காட்சியை ரசிகர்களுடன் இணைந்து காண திரையரங்குகளுக்கு வருகை தந்தனர். மேலும், நடிகர் தனுஷின் மகன் யாத்ரா மற்றும் அவரது அக்கா மகனும் நடிகருமான பவிஷ் ஆகியோரும் திரையரங்குக்கு வந்து படத்தைப் பார்த்தனர். இதனால் திரையரங்குகளில் ரசிகர்களின் உற்சாகம் மேலும் அதிகரித்தது.