

ஷங்கர் இயக்கிய ஜென்டில்மேன், காதலன் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் காந்தி கிருஷ்ணா. விஷாலை வைத்து ‘செல்லமே’ படத்தை இயக்கி ஹிட் கொடுத்தார் காந்தி கிருஷ்ணா. ‘செல்லமே’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘ஆனந்த தாண்டவம்’ படத்தை இயக்கினார். இந்த படம் தோல்வியை சந்திக்கவே அடுத்து இவர் இயக்கத்தில் எந்த படமும் வெளியாகவில்லை.
அதன் பிறகு இவர் தற்போது ‘பிரேக் பாஸ்ட்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் புதுமுகங்கள் பிக்பாஸ் ராணவ், ரோஸ்லின், க்ரித்திக் மோகன், அமிதா ரங்கநாதன் மற்றும் அர்ச்சனா, சம்பத்ராம், ரவிமரியா என பல நடித்துள்ளனர். பிரேம் கிளாசிக் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் விரைவில் வெளியாகவுள்ளது.
‘பிரேக் பாஸ்ட்’ படத்தின் டைட்டில் மற்றும் டைட்டிலுக்கான மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் எதார்த்தத்தை ஏற்றுக் கொள் என்ற வாசகமும், பிரேக் பாஸ்ட் ஆகிய வார்த்தைகளுக்கு நடுவே.. தாலியை கையெறி குண்டுடன் இணைத்து வடிவமைக்கப்பட்டு இருப்பது... காதல் தொடர்பான உணர்வுகளை விவரிக்கும் படைப்பு என்பது தெரிய வருவதால் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது. தொடுதிரை போன் வந்த பிறகு நடந்த கலாச்சார மற்றும் உளவியல் ரீதியான மாற்றங்களை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
இந்த நிலையில் ‘பிரேக் பாஸ்ட்’ படத்திற்கு ஏன் இவ்வளவு இடைவேளை என்பது குறித்து இயக்குநர் காந்தி கிருஷ்ணா பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “சில பெரிய படங்களை எடுக்க திட்டமிட்டிருந்தேன். விக்ரமை வைத்து கரிகாலன் படத்தை ஆரம்பித்தேன். ஆனால் இரண்டு வருடத்திற்கு பிறகு பட்ஜெட் உள்ளிட்ட சில காரணங்களால் அது கைவிடப்பட்டது. பின்பு அரவிந்த சாமியை வைத்து தொடங்கப்பட்ட இன்ஜினியர் படமும் அடுத்தக்கட்டத்துக்கு நகரவில்லை. இந்த படத்திற்கு மட்டுமே ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது” என்றார்.