லஞ்சம் வாங்க இதயத்தில் பயத்தை ஏற்றியவர் முதல்-அமைச்சர் விஜய் - நடிகர் பார்த்திபன்

நாட்டின் 80-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட இருக்கிறது.
லஞ்சம் வாங்க இதயத்தில் பயத்தை ஏற்றியவர் முதல்-அமைச்சர் விஜய் - நடிகர் பார்த்திபன்
Published on

சென்னை தலைமைச்செயலகம் செயல்பட்டு வரும் புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல் முறையாக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தேசியக் கொடியை ஏற்ற உள்ள நிலையில், நடிகர் பார்த்திபன் அவரை பாராட்டியுள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. அக்கட்சியின் தலைவரும், முதல்-அமைச்சருமான ஜோசப் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் “ஊழல் இல்லாத, லஞ்சம் இல்லாத ஆட்சியை கொடுப்பேன்” என்று கூறியிருந்தார்.

நாட்டின் 80-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட இருக்கிறது. அதையொட்டி, சென்னை தலைமைச்செயலகம் செயல்பட்டு வரும் புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல் முறையாக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தேசியக் கொடியை ஏற்ற இருக்கிறார்.

இதையொட்டி அவருக்கு நடிகர் பார்த்திபன் அவருக்கே உரிய தனித்துவமான வார்த்தை ஜாலத்துடன் வெளியிட்டுள்ள வாழ்த்து வருமாறு:-

'வெற்றிக் கொடி கட்டு' படத்தில் நடித்த நான், அரசியலில் வெற்றிக் கொடி கட்டிய தமிழக வெற்றிக் கழக தலைவர், மாநில முதல்வராக சுதந்திர தினத்தன்று மூவர்ண கொடியை ஏற்றுவதைப் பற்றி கவிதை இயற்றுவதா?

அட கவிதையாக இல்லாவிட்டாலும் உரைநடையாவது... யோசித்தபடி..... தமிழ் அகராதியில் வார்த்தைகளை யாசித்தபடி......

கொடி காத்த குமரன் முதற்கொண்டு எண்ணற்ற தியாகிகள் பெற்று தந்த சுதந்திரத்தை மதிப்புடன் மடித்து கட்டிக் காத்த சுதந்திர கொடியை ஆகஸ்ட் 15ல் பட்டொளி வீசி பறக்கவிடும் பெருமையை நமது முதல்வர் முதன்முறை பெறுகிறார்.

தமிழ்தாய் வாழ்த்து தான் விழாக்களின் தொடக்கமாக பாடப்பட வேண்டுமென சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியவர்.

அனுபவம் இல்லாவிட்டாலும் மக்களுக்கான சம்பவம் செய்ய அரசியலுக்கு வந்து வெற்றிக் கொடி நாட்டலாம் என்ற நம்பிக்கையை நம் நாட்டு இளைஞர்கள் மனதில் ஏற்றியவர், ஆட்சி முறை பெற பணம் தேவையில்லை, மக்களின் நன்மதிப்பை மட்டும் கவனமாக நம் பக்கம் திருப்பினாலே வெற்றி தான் என்ற சூத்திரத்தை அரசியல்வாதிகளுக்கே ஏற்றியவர்.

அரசு ஊழியர்கள் நேரத்தோடு வேலைக்கு வந்து நேர்மையோடு வேலை செய்ய வேண்டும் என்பதற்காக தானே முன் உதாரணத்தை ஏற்றியவர். விவசாயிகளுக்கான சிறப்பு ஊக்கத்தொகையை வரலாறு காணாத அளவு ஏற்றியவர். லஞ்சம் வாங்க இதயத்தில் பயத்தை கொஞ்சமாக ஏற்றியவர். ஆக இன்னும் பல நன்றை ஏற்றியவர் என்ற தகுதியுடன் ஆகஸ்டு 15-ல் சுதந்திரக் கொடியை ஏற்றுகிறார். நமது முதல்-அமைச்சர் பெருமையுடன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com