

இந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மம்முட்டி, சமீபத்திய பேட்டியில் சினிமா வாழ்க்கையின் தனித்துவம் குறித்து மனம்திறந்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், “சினிமா என்பது எப்போதும் ஒரே மாதிரி செய்யக்கூடிய வேலை அல்ல. ஒவ்வொரு நாளும் புதிய மனிதர்கள், புதிய இடங்கள், புதிய சூழல்கள். இன்று சேர்ந்து பணிபுரியும் குழு, நாளை மாறிவிடும். அம்மா, அப்பா, நண்பர்கள் எல்லாம் மாறிக்கொண்டே இருக்கும்,” என்று தெரிவித்தார்.
மேலும், ஒரு படத்தில் குறைந்தது இரண்டு மாதங்கள் வேறு குழுவுடன் இணைந்து பணியாற்ற வேண்டியிருப்பதாகவும், அது முற்றிலும் வேறுபட்ட வாழ்க்கை அனுபவமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். “ஒவ்வொரு நாளும் புதிய நாளாகவே இருக்கும். புதிய விஷயங்களை செய்ய வேண்டியிருக்கும்,” என்றார்.
அதே கதாபாத்திரத்தில் நடித்தாலும், தினமும் நடிப்பு மாறுபடும் என்றும் அவர் விளக்கினார். “நேற்று நடித்த விதமும், இன்று நடிக்கும் விதமும் வேறுபடும். ஒரே கதை, ஒரே நடிகர்கள் இருந்தாலும், அந்த நாளின் மனநிலை, சூழ்நிலை எல்லாம் மாறுவதால் நடிப்பும் மாறும்,” என்று கூறினார்.
சினிமா ஒரு சவாலானதோடு, தொடர்ந்து புதுமையை தரும் துறையாக இருப்பதால் தான் அதில் நீண்ட காலமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறேன் என்றும் மம்முட்டி தெரிவித்துள்ளார்.