

ரஜினி, கமல் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்ப்பில் இன்பன் உதயநிதி தயாரிக்க உள்ளார். 47 வருடங்களுக்குப் பிறகு ரஜினியும் கமலும் இணைந்து நடிப்பதால் இந்த படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்தினை நெல்சன் இயக்க உள்ளார். அனிருத் இசையமைக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ரஜினி-கமல் இணையும் (KHxRK) படத்தில் ஒளிப்பதிவாளராக ராஜீவ் மேனன் களமிறங்கியுள்ளார்.
அரவிந்த்சாமி, மனிஷா கொய்ராலா நடிப்பில், மணிரத்னம் இயக்கிய 'பம்பாய்' திரைப்படத்தில் ராஜீவ் மேனன் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். தற்போது மம்முட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடித்துள்ள 'பேட்ரியாட்' படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார் ராஜிவ் மேனன்.
ராஜீவ் மேனன் தற்போது மலையாளத்தில் அளித்திருக்கும் பேட்டியில் ரஜினி - கமல் படம் பற்றி பகிர்ந்திருக்கிறார். அதில் “இயக்குநர் நெல்சன் எனக்கு தொலைபேசியில் அழைத்து இந்தப் படம் குறித்துப் பேசினார். அவர் கதையை விவரிக்கும் விதம் மிகவும் ரசிக்கத்தக்கதாக இருக்கும். முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் , மிகுந்த நகைச்சுவையுடன் அவர் கதை சொல்லும் பாங்கு நம்மைச் சிரிக்க வைக்கும். அவர் கதையைக் கூறி முடித்ததும், 'சார், இதற்கு நீங்கள் ஒளிப்பதிவு செய்கிறீர்களா?' என்று கேட்டார். 'நிச்சயமாக! இந்த ஐடியாவே எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது' என்று கூறி உடனடியாகச் சம்மதம் தெரிவித்தேன்.
நெல்சன் அழைத்த ஒரு வாரத்திலேயே புரோமோ படப்பிடிப்பிற்கு வரச் சொன்னார். படத்தின் நாயகர்கள் யார் என்பது குறித்து எனக்கு ஒரு சிறிய குறிப்பை மட்டும் அப்போது அளித்திருந்தார்.நான் கமல்ஹாசனுடன் ஏற்கனவே விளம்பரப் படங்களில் பணியாற்றியுள்ளேன். ஆனால், ரஜினிகாந்திற்கு நான் ஒளிப்பதிவு செய்வது இதுவே முதல்முறை. இந்த புரோமோ படப்பிடிப்பு அனுபவம் மிகவும் உற்சாகமாகவும், கலகலப்பாகவும் அமைந்தது. முக்கியமாக, இரு பெரும் சூப்பர் ஸ்டார்களின் அந்தஸ்தை ஓரம் கட்டிவிட்டு, அவர்களைச் சாதாரண மனிதர்களாகக் கொண்டு வந்த நெல்சனின் ஐடியா எனக்குப் பிடித்திருந்தது.
இக்கதை இன்றைய தலைமுறை இளைஞர்களையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மற்றொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், எனது நீண்டகாலத் திரைப் பயணத்தில் நான் செய்த பணிகளுக்கு வராத அளவிற்கு, இந்தப் படத்தின் புரோமோ வெளியான பிறகு எனக்கு பாராட்டுக் குரல்கள் வந்தன. ரஜினி மற்றும் கமல் இருவரும் தற்போது தங்களது பிற பணிகளில் மும்முரமாக இருப்பதால், இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் தொடங்கும்” எனத் தெரிவித்தார்.