

சென்னை,
தங்க நகைகளை விற்பனைக்காக பெற்றுக்கொண்டு, அதற்கான பணத்தில் ரூ.10 லட்சத்தை வழங்காமல் ஏமாற்றியதாக காங்கிரஸ் பிரமுகர் மீது தொலைக்காட்சி நடிகர் முகமது குரேஷியின் மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் டி.வி. நடிகர் முகமது குரேஷி. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். இவரது மனைவி, சென்னை அண்ணா சாலை போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், அவசர பணத் தேவை காரணமாக தன்னிடம் இருந்த 92.73 கிராம் எடையுள்ள தங்க நகைகளை காங்கிரஸ் பிரமுகர் ரஞ்சன் குமாரிடம் விற்பனை செய்வதற்காக வழங்கியதாக தெரிவித்துள்ளார்.
தங்க நகைகளுக்கு ரூ.14 லட்சம் தருவதாக ரஞ்சன் குமார் உறுதியளித்ததாகவும், அதன்படி முதற்கட்டமாக ரூ.4 லட்சம் மட்டுமே வழங்கியதாகவும், மீதமுள்ள ரூ.10 லட்சத்தை பலமுறை கேட்டும் அவர் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, தனக்கு சேர வேண்டிய பணத்தைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தப் புகார் தொடர்பாக அண்ணா சாலை போலீசார், புகார்தாரருக்கு சி.எஸ்.ஆர். ரசீது வழங்கி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, தன் மீதான புகார் குறித்து ரஞ்சன் குமார் விளக்கம் அளித்துள்ளார். புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் தவறானவை என்றும், இந்தப் புகாரை சட்டப்படி எதிர்கொள்ளப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால், இருதரப்பினரின் புகார் மற்றும் விளக்கங்களின் அடிப்படையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவிலேயே இந்த விவகாரத்தின் முழு விவரங்கள் தெரியவரும்.