கமல்ஹாசன்-மாயா குறித்து சர்ச்சை காமெடி... மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட புகழ், குரேஷி...!

இந்த சீசனில் தொகுப்பாளர் கமலின் செயல்பாடுகள் சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளானது.
கமல்ஹாசன்-மாயா குறித்து சர்ச்சை காமெடி... மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட புகழ், குரேஷி...!
Published on

சென்னை,

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஆறு சீசன்கள் முடிவடைந்துள்ளது. தற்போது 7வது சீசன் வரும் ஞாயிறு அன்று முடிவடைய உள்ளது. இதில் சின்னத்திரை நடிகை அர்ச்சனா கோப்பையை வெல்வார் என எதிப்பார்க்கப்படுகிறது.

கடந்த 6 சீசன்களை போலவே இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இந்த சீசனில் தொகுப்பாளர் கமலின் செயல்பாடுகள் சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த சீசனில் போட்டியாளராக உள்ள நடிகை மாயா, கமலுடன் விக்ரம் படத்தில் நடித்துள்ளதால் அவருக்கு ஆதரவாக கமல் செயல்படுகிறார் என்று பலரும் குற்றம் சாட்டினர்.

இதற்கிடையே சின்னத்திரை பிரபலங்களான புகழ், குரேஷி இருவரும் அண்மையில் துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளனர். அப்போது கமல், மாயா இருவரையும் குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசி காமெடி செய்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக புகழ், குரேஷி இருவரும் தனித்தனியாக வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்டுள்ளனர். அவர்கள் அந்த வீடியோவில் நடிகர் கமல்ஹாசன் மீது நாங்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளோம். அந்த நிகழ்ச்சியில் எங்களுக்கு கொடுக்கப்பட்ட விஷயத்தை நாங்கள் செய்தோம். அது இந்த அளவு சர்ச்சையாகும் என எதிர்பார்க்கவில்லை.

இனிமேல் அடுத்தவர்கள் மனது புண்படாத வகையில் காமெடி செய்வதில் கவனமாக இருப்போம். இதனால் கமல் ரசிகர்கள் மனம் புண்பட்டு இருந்தால் மன்னிப்பு கேட்டு கொள்கிறோம்' என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com