

ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் யோகேந்திர சிங் படியால். இவர் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் மற்றும் ராஜு பான் மசாலா நிறுவனத்திற்கு எதிராக அங்குள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளித்தார். அதில், ‘குங்குமப்பூ கலந்த ஏலக்காய் எனக்கூறி புற்றுநோயை உண்டாக்கும் அபாயகரமான போதைவஸ்து பொருட்களை விளம்பரம் செய்து மக்களை திசைதிருப்புகின்றனர்’ என்று குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 6ம் தேதி அந்த விளம்பரங்களை ஒளிபரப்ப நுகர்வோர் கோர்ட் தடை விதித்தது. எனினும், ஜனவரி 9ம் தேதி வரை ஜெய்ப்பூர் மற்றும் கோட்டா போன்ற நகரங்களில் விளம்பர தட்டிகள் அகற்றப்படவில்லை என புகார் எழுந்தது.
இந்த வழக்கில் ஆஜராகாததால், நடிகர் சல்மான் கானுக்கு எதிராக மாவட்ட நுகர்வோர் ஆணையம் நான்கு முறை பிடிவாரன்ட் பிறப்பித்தது. இந்நிலையில், இந்த உத்தரவுகளை எதிர்த்து சல்மான் கான் தரப்பில் ராஜஸ்தான் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனூப் சிங் அமர்வு, சல்மான் கானுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரன்ட் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், விளம்பரங்களுக்கு விதிக்கப்பட்ட தடை மற்றும் வாரன்ட் தொடர்பான முந்தைய உத்தரவுகளையும் நிறுத்தி வைத்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.