ரவிமோகன் விவகாரத்தில் அவதூறு: பாடகி கெனிஷா எடுத்த அதிரடி முடிவு

சமூக வலைத்தளங்களில் மிரட்டல் விடுத்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாடகி கெனிஷா வெளியிட்ட நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
நடிகர் ரவி மோகன், ஆர்த்தி ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதற்கிடையில், கடந்த ஆண்டு தன் மனைவியை பிரிவதாக ரவிமோகன் தெரிவித்தார். இவர்களது விவாகரத்து வழக்கு விசாரணை கோர்ட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் நடிகர் ரவிமோகன் பாடகி கெனிஷாவுடன் திருமண விழாவில் கலந்து கொண்டார். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலானது. இதுகுறித்து ஆர்த்தி பரபரப்பு அறிக்கை வெளியிட்டார். அதை தொடர்ந்து ரவி மற்றும் ஆர்த்தி என இருவரும் மாறி மாறி பல குற்றச்சாட்டுகள் உடன் அறிக்கைகள் வெளியிட்டு வந்தனர். அதில் ஆர்த்தி ரவியுடனான பிரிவிற்கு மூன்றாவது நபரே காரணம் என குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலளித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு கெனிஷா 'நான் நல்ல குடும்பத்தில் இருந்து வந்த பெண்' உங்களுக்கு தைரியம் இருந்தால் என் முகத்தைப் பார்த்து என் மீதான விமர்சனத்தை முன் வையுங்கள், நான் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கிடையில், தங்களுக்கு இடையேயான பிரச்சினை குறித்து ரவிமோகன், ஆர்த்தி இருவரும் சமூக வலைதளங்களில் இனி எந்த அறிக்கையும் விடக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
இந்த நிலையில், பாடகி கெனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னை பற்றி அவதூறாக பேசியவர்களுக்காக நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதாவது, "பாலியல் வல்லுறவு மிரட்டல், ஆபாச அர்ச்சனைகள், கொலை மிரட்டல் விடுவோரின் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். யூடியூப், இன்ஸ்டா, பேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட தளங்கள் என்னை பற்றிய அவதூறுகளை அனுமதிக்கக் கூடாது. சமூக வலைத்தளங்களில் மிரட்டல் விடுத்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






