மோசடி வழக்கு: நடிகை ஜாக்குலின் 14-ந்தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன்

டெல்லி போலீசாரின் பொருளாதார குற்றப்பிரிவு ஜாக்லினுக்கு அனுப்பும் மூன்றாவது சம்மன் இதுவாகும்.
Image Tweeted By @Asli_Jacqueline
Image Tweeted By @Asli_Jacqueline
Published on

புதுடெல்லி,

பெங்களூரை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாக கூறி மோசடி செயலில் ஈடுபட்டு வந்தார். 2017-ம் ஆண்டு இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக டி.டி.வி. தினகரன் சார்பில் தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற போது அவர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

சுகேஷ் சந்திரசேகர் ஏற்கனவே பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது 2 தொழில் அதிபருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

அப்போது ஜாமீன் பெற்று தருவதாக கூறி சுகேஷ் சந்திரசேகர் தொழில் அதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்துள்ளார். இதையடுத்து அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக சுகேஷ், அவரது மனைவி உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரையும் சேர்த்துள்ளது. மோசடி பணத்தில் ஜாக்குலினுக்கு விலை உயர்ந்த பரிசு பொருட்களை வாங்கி கொடுத்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

சுகேஷ் சந்திரசேகரின் குற்றப் பின்னணி தெரிந்து இருந்தும் அவருடன் ஜாக்குலின் பழகியதுடன் பரிசு பொருட்களை பெற்றுள்ளார் என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடிகை ஜாக்லின் இன்று நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி இருந்தனர்.

இந்த நிலையில் நடிகை ஜாக்குலின் இன்று நேரில் ஆஜராகவில்லை. தனக்கு சினிமா படப்பிடிப்பு ஷூட்டிங் இருப்பதால், வேறொரு நாளில் அதிகாரிகள் முன் ஆஜராக நடிகை ஜாக்குலின் அனுமதி கேட்டு கொண்டுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், செப்டம்பர் 14-ம் தேதி டெல்லி போலீசார் முன் விசாரணைக்கு ஆஜராகுமாறு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. டெல்லி போலீசாரின் பொருளாதார குற்றப்பிரிவு ஜாக்லினுக்கு அனுப்பும் மூன்றாவது சம்மன் இதுவாகும்.

முன்னதாக ஆகஸ்ட் 29 அன்றும் வேலையை மேற்கோள் காட்டி ஜாக்லின், டெல்லி போலீசார் முன் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com