“துரந்தர் 2” தூக்கத்தை வரவைக்கும் காமெடி படம் - நடிகை ரம்யா விமர்சனம்

ரன்வீர் சிங் நடித்துள்ள ‘துரந்தர் 2’ படம் 4 நாள்களில் ரூ.761 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
“துரந்தர் 2” தூக்கத்தை வரவைக்கும் காமெடி படம் - நடிகை ரம்யா விமர்சனம்
Published on

பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் ‘துரந்தர்’. இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1350 கோடிக்கும் மேல் வசூலித்து மெகா ஹிட் ஆனது. இப்படம் முஸ்லிம்களை கெட்டவர்களாக சித்தரித்து எடுக்கப்பட்ட இந்துத்துவ பிரச்சார படம் என்று விமர்சனம் எழுந்தது. இந்து - முஸ்லிம் பிரச்சினை தூண்டுவதாக வெளியான விமர்சனத்தால் அரபு நாடுகள் இப்படத்தை வெளியிட தடை விதித்திருந்தது.

‘துரந்தர்’படத்தின் 2 ஆம் பாகமாக ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ திரைப்படம் கடந்த 19ம் தேதி வெளியானது. இத்திரைப்படம் 4 நாள்களிலேயே ரூ.761 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

கன்னட திரை உலகில் நடிகையாக அறிமுகமானவர் ரம்யா. இவர் தமிழ், தெலுங்கு உள்பட தென்னிந்திய மொழிப் படங்களில் பிரபல நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார். மேலும் காங்கிரசில் இணைந்து எம்.பி.யாகவும் பணியாற்றியுள்ளார். தமிழில் ‘பொல்லாதவன்’ ‘வாரணம் ஆயிரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், ‘துரந்தர் 2’ திரைப்படம் குறித்த தனது விமர்சனத்தை நடிகை ரம்யா தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் “துரந்தர் 2 படத்தை இப்போதுதான் பார்த்தேன். அடடா..ஒரு நல்ல படத்தை எப்படி பொறுமையை சோதிக்கும் வகையில் உருவாக்குவது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். இது, முடிவில்லாத சேப்டர்களை கொண்ட மிகவும் சலிப்பூட்டும் ஒரு பாடத்தின் பாடப்புத்தகத்தைப் படிப்பது போன்றது. ஒரு கட்டத்தில், உங்கள் மூளை சோர்வடைந்து, உங்கள் கண்முன்னே அரங்கேறும் கொடூரத்தைக் கண்டு மிகுந்த விரக்தியில் சிரிக்கத் தொடங்கிவிடுவீர்கள்.

நீங்கள் உண்மையிலேயே இதைப் பார்க்க விரும்பினால், உங்களுக்கு நீங்களே ஒரு நன்மை செய்துகொள்ளுங்கள், திரையரங்கில் உங்கள் நேரத்தையும் பணத்தையும் வீணாக்காதீர்கள். இது முழுக்க முழுக்க மொபைல் பார்த்துக் கொண்டே சில படங்களை கடமைக்கு என்று பார்த்து முடிப்போம் அல்லவா அந்த வகையிலான ஒரு படம். இதிலிருந்து தப்பிக்க ஒரு நொடியில் நமக்கு வழிவிடும் ஒரு ஸ்ட்ரீமிங் தளத்தில் பார்ப்பதே நல்லது என்று நான் நினைக்கிறேன். இயக்கம், வசனங்கள், படத்தொகுப்பு, பின்னணி இசை, நடிப்பு என அனைத்தும் தரம் குறைந்தவையாகவே இருந்தன. இல்லையென்றால், இந்த படத்தை இதைவிட மோசமாக கொடுக்க முடியாது என்று தெரிந்துதான் படத்தை ரிலீஸ் செய்துள்ளார்கள். துரந்தர் (பாகம் 1)-ல், ரசிகர்கள் தியேட்டரில் ஆரவாரம் செய்தார்கள், கைதட்டினார்கள், உற்சாகமாக இருந்தார்கள். அங்கே ஒரு எனர்ஜி இருந்தது. ஒரு ஈடுபாடு இருந்தது. இதில் - ரசிகர்களிடம் அது எதுவுமே இல்லை. திரையரங்கில் இருந்தவர்களின் ஒட்டுமொத்த ஏமாற்றத்தை உணர முடிந்தது.

முதல் பாகத்தில், அவருடைய முடிக்கு ஒரு தனித்துவம், ஒரு ஈர்ப்பு, ஒரு குணாதிசயம் இருந்தது. இதில், அவரது நீண்ட முடி சும்மா இருக்கிறது. எல்லாவற்றிற்கும் இடையூறாக இருக்கிறது. படமே இல்லை: மேலும் அந்த வன்முறை!!! இது ஒரு படமே அல்ல, இது அடிப்படையில், கையில் இருக்கும் எந்தவொரு பொருளையும் கொண்டு எவ்வளவு படைப்பாற்றலுடன் வன்முறையை வெளிப்படுத்தலாம் என்பதற்கான ஒரு காட்சி வழிகாட்டிப் புத்தகம் இருக்கிறதா?

இயக்குநர் தனக்குத்தானே ஒரு தொடர்ச்சியான போட்டியில் இருப்பது போல் தெரிகிறது: அதாவது அடுத்த காட்சியை முந்தைய காட்சியை விட எப்படி அதிக வன்முறையாக (நகைச்சுவையாக) மாற்றுவது? என்பதில் சரியான போட்டிதான். ஆக்‌ஷன் காட்சிகளும் வன்முறைக் காட்சிகளும் அதிர்ச்சியளிப்பதை நிறுத்திவிட்டு, விழுந்து விழுந்து சிரிக்கும் அளவுக்கு மோசமாக உருவாக்கப்பட்டுள்ளது. படம் எதார்த்தத்தை விட்டு ரொம்பவும் விலகி இருப்பது மட்டுமல்லாமல், கொஞ்சமாவது இதில் அறிவியல் இருக்கிறதா?. ஆஸ்கரை மறந்துவிடுங்கள், நோபல் பரிசு வரப்போகிறது. சுருக்கமாகச் சொன்னால்: துரந்தர் 2 ஒரு மிகப்பெரிய ஏமாற்றம். அதிகபட்சம் ஒரு தூக்கத்தை வரவைக்கும் காமெடி படம். முதல் பாகம் உங்களை ஆர்ப்பரிக்க வைத்திருந்தால், இந்தப் பாகம் 'ஏன் துரந்தர் 2, ஏன்?' என்று உங்களைக் கேள்வி கேட்க வைக்கும். ரன்வீர், நீங்கள் இதைவிட நன்றாக நடிக்க கூடியவர். ஆதித்யா தார் உங்கள் தேசப்பற்றும் பிரச்சாரமும் பழங்கதையாகி விட்டது. அதிலிருந்து வெளியே வாருங்கள்”என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com