திரைத்துறையில் 21 ஆண்டுகள் நிறைவு: ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த இயக்குநர் அமீர்

எனக்கு ஆதரவு அளித்த தமிழக ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் என்று இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
திரைத்துறையில் 21 ஆண்டுகள் நிறைவு: ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த இயக்குநர் அமீர்
Published on

சென்னை,

இயக்குநர் அமீர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மரியாதைக்குரிய பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும், பேரன்புக்கும் பாசத்துக்கும் உரிய தமிழக மக்களுக்கும் என் அன்பு கலந்த வணக்கம். கடந்த ஒரு மாதத்திற்கு முன் என்னை வீழ்த்துவதற்காக அவதூறுகளையும், அவமானங்களையும் பொதுவெளியில் எனக்கு சிலர் அன்பளிப்பாக கொடுத்தபோது, நான் சோர்ந்துவிடாமலும் துவண்டுவிழாமலும் பார்த்துக் கொள்ளும் விதமாக எனக்கு தன்னம்பிக்கையையும், அன்பையும், ஆதரவையும் எதிர்பாராத அளவிற்கு அளித்த தமிழக ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும், ஊடகத்துறையினருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

ஒரு இயக்குநராக எனக்கு அடையாளத்தைப் பெற்று தந்த என்னுடைய முதல் திரைப்படம் "மௌனம் பேசியதே" வெளியாகி இன்றோடு 21 ஆண்டு நிறைவடைந்திருக்கிறது. இந்த நெகிழ்வான தருணத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

சென்னையை நோக்கி - சினிமாவை நோக்கி படையெடுத்து வந்த எல்லோரது கனவும் நனவாவது இல்லை. அப்படி கனவுகளை சுமந்து கொண்டிருந்த கூட்டத்தில் ஒருவனாக இருந்த என்னை கரம் பிடித்து உயர்த்தி என்னுடைய திரைக்கனவை நனவாக்கிய, "மௌனம் பேசியதே" திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் கணேஷ் ரகு மற்றும் வெங்கி நாராயணன் உள்ளிட்ட அபராஜித் பிலிம்ஸ் நிறுவனத்தாருக்கும், என்னோடு பயணித்து திரைப்படத்தின் வெற்றிக்கு கரம் கொடுத்த சூர்யா, திரிஷா, லைலா உள்ளிட்ட நடிகர், நடிகைகளுக்கும். ஒளிப்பதிவாளர் ராம்ஜி மற்றும் யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் திரைத்துறை தொழிலாளர்களுக்கும் என் நன்றிகள்.!

என்னுடைய திரைப்பயணம் தொடங்கிய இந்த 21 ஆண்டுகளில், நான் இயக்கிய படங்கள் குறைவாக இருந்தாலும் இன்னும் என்னை மனதில் நிறுத்தி தொடர்ந்து சமூக வலைதளங்களில், ஊடகங்களில் ஆதரவு தந்து கொண்டிருக்கின்ற திரை ரசிகர்களுக்கும், ஊடக பத்திரிகை நண்பர்களுக்கும், தமிழக மக்களுக்கும் குறிப்பாக "மௌனம் பேசியதே" ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.!. இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com