மனைவி, மகளை வீட்டிலிருந்து விரட்டிவிட்டு விஜய் “மகளிர் தின விழா” கொண்டாடுவதாக இயக்குநர் அமீர் தாக்கு

தமிழ்நாட்டில் ஒரு ஹிட்லர் உருவாகிக்கொண்டு இருக்கிறார் என்று அமீர் விஜய்யை விமர்சனம் செய்துள்ளார்.
மனைவி, மகளை வீட்டிலிருந்து விரட்டிவிட்டு  விஜய் “மகளிர் தின விழா” கொண்டாடுவதாக இயக்குநர் அமீர் தாக்கு
Published on

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் குறித்து கட்சி தொடங்கியதில் இருந்து பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது. இதனிடையே கரூர் சம்பவத்தை அடுத்து அவர் மீது குற்றச்சாட்டுகள், வழக்குகள் என நடைபெற்று வருகிறது. இதற்கெல்லாம் அவருக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

தவெக தலைவர் விஜய், திருமணத்தை மீறிய உறவில் ஒரு நடிகையுடன் இருந்ததாக கூறி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடுத்துள்ளார். கடந்த சில காலங்களாக சங்கீதா பொது நிகழ்ச்சிகளில் தென்படாததால் சமூக வலைதளங்களில் பல வதந்திகள் பரவின. திருமணத்தை மீறிய உறவில் இருப்பதால் நடிகர் விஜய்யிடமிருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்துள்ள வழக்கு வரும் ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வர இருக்கிறது.

சமீபத்தில் கல்பாத்தி அகோரம் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான கல்பாத்தி சுரேஷ் மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விஜய்யும் திரிஷாவும் ஒரே காரில் வந்து கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். இருவரும் ஒரே நிற பட்டு உடைகள் அணிந்து விழாவில் பங்கேற்றனர். இதற்கு முன்பாக இருவரும் ஒன்றாக திருமண விழாவில் பங்கேற்றது கிடையாது. விஜய் - சங்கீதா விவாகரத்து பிரச்சினைக்கு பிறகு விஜய் கலந்து கொள்ளும் முதல் திருமண நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக விஜய் மீது கடும் விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. முன்னதாக விஜய்க்கு ஆதரவாக குரல் எழுப்பியவர்கள் கூட தற்போது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் மாமல்லபுரத்தில் இன்று மாலை மகளிர் தின விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் மகளிருக்கான அறிவிப்புகளை விஜய் வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, த.வெ.க.வின் மகளிர் தின விழா குறித்து இயக்குநரும், நடிகருமான அமீர் விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அமீர் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில், தமிழ்நாட்டில் ஒரு ஹிட்லர் உருவாகிக்கொண்டு இருக்கிறார். மனைவி, மகளை வீட்டிலிருந்து விரட்டிவிட்டு மகளிர் தின விழா கொண்டாடுவதா என விமர்சித்துள்ளார். தற்போது அமீர் கூறியிருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com