கென்-க்கு நான் கொடுத்த பெரிய பரிசு என்ன தெரியுமா? யூத் பட தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்

இந்தப் படத்தின் தொடக்கத்திலேயே நான் அவருக்கு ஒரு பரிசை வழங்கியுள்ளேன் என்று தயாரிப்பாளர் கருப்பையா கூறியுள்ளார்.

கென்-க்கு நான் கொடுத்த பெரிய பரிசு என்ன தெரியுமா? யூத் பட தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் கென் கருணாஸ். அதனை தொடர்ந்து 'அசுரன்', 'விடுதலை 2', 'வாத்தி' உள்ளிட்ட படங்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்றுள்ளார்.

இவரது நடிப்பில் சமீபத்தில் 'யூத்' என்ற படம் வெளியானது. இந்த படத்தை கென் கருணாஸ் இயக்கி நடித்திருந்தார். பார்வதா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் ஸ்ட்ரீட் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இதில் அனிஷ்மா, மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். பள்ளி மாணவர்களின் கதையை மையப்படுத்தி வெளியான இந்த படம் முதல் நாளிலிருந்தே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை ரூ.60 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

‘யூத்’ படம் பெற்ற மிகப்பெரிய வரவேற்பைத் தொடர்ந்து, சென்னை நகரில் சக்சஸ் மீட் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கென், “இந்தப் படத்தில் நடித்த அனைவரும் அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. படம் குறித்து வந்த அனைத்து விமர்சனங்களையும் பார்த்தும், படித்தும் இருக்கிறேன். அடுத்தடுத்த படங்களில் அந்த குறைகளை சரிசெய்ய முயற்சி செய்வேன். இந்த படம் என் வாழ்க்கையை முழுவதும் மாற்றிவிடும் என்று நினைக்கவில்லை. ஆனால் ‘யூத்’ படம் எனக்கு நிறைய பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளது. ஒரு ஹீரோவாக என்னை இந்த படம் மாற்றியுள்ளது. அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி,” என கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் கருப்பையா, “யூத் படத்தின் வெற்றிக்குப் பிறகு கென்-க்கு என்ன பரிசளிக்கப் போகிறேன் என்று பலர் கேட்கிறார்கள். ஆனால், இந்தப் படத்தின் தொடக்கத்திலேயே நான் அவருக்கு ஒரு பரிசை வழங்கியுள்ளேன். கென்-ஐ இப்படத்தின் தயாரிப்பாளராக இணைத்து, படத்தின் வருவாயில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை வழங்கியுள்ளேன். இனிவரும் எனது அனைத்து படங்களிலும் இதே முறையை பின்பற்றுவேன். இதன் மூலம், அந்தப் படத்தின் இயக்குநரே முழு உரிமையாளராக இருப்பார்,” என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “நானும் இயக்குநராக வேண்டும் என்ற ஆசையுடன் இந்தத் துறையில் நுழைந்தவன். இயக்குநர்கள் சந்திக்கும் சிரமங்களை நன்றாக புரிந்துள்ளேன். அவர்கள் வெற்றி பெறும் நேரத்தில் மட்டும் அல்லாமல், எல்லா நேரத்திலும் அவர்களுக்கு துணையாக இருக்க வேண்டும். இந்தப் படத்தைத் தொடர்ந்து மேலும் பல படங்களை இணைந்து உருவாக்க உள்ளோம்,” என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com