“வெளியே எங்கேயும் போகாதீர்கள்… அடி விழப் போகிறது!” – ரகுவை எச்சரித்த விக்ரம் பிரபு

கோவிந்தராஜ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து நடிகர் ரகு பார்வையாளர்களின் வெறுப்பை தன் மீது கொட்டிக்கொண்டார்.
விக்ரம் பிரபு நடிப்பில் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள படம் ‘சிறை’. படத்தில் கதாநாயகியின் அக்கா கணவராக கோவிந்தராஜ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து நடிகர் ரகு பார்வையாளர்களின் வெறுப்பை தன் மீது கொட்டிக்கொண்டார்.
சிறை படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகர் ரகு கூறும்போது, “படத்தில் எந்த நேரமும் குடித்துக் கொண்டிருக்கும் ஒரு கதாபாத்திரம். இயல்பில் எனக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை. ஆனாலும் அது போல நடிக்க வேண்டி இருந்தது சவாலாக இருந்தது. தர்மதுரைக்கு பிறகு எல்லோரிடமும் தொடர்பு படுத்திக் கொள்ளும் வலுவான கதாபாத்திரமாக கிடைத்ததும் தற்போது அது பாராட்டுக்களை பெற்று வருவதும் மகிழச்சி தருகிறது.
இன்றைய காலகட்டத்தில் திரைப்படம், வெப் தொடர் இரண்டுக்குமே வேறு வேறு விதமான பார்வையாளர்கள் என்றாலும் கூட இரண்டுமே எங்களைப் போன்ற நடிகர்களுக்கு முக்கியமானதுதான். அதனால் இரண்டிலுமே சரிசமமாக நடிப்பது நல்ல விஷயம்தான். சிறை படத்தில் விக்ரம் பிரபுவுக்கும் எனக்குமான காம்பினேஷன் காட்சிகள் எதுவும் இல்லை என்றாலும் படம் பார்த்துவிட்டு என்னை பாராட்டினார். அதன் பிறகு வெளியே எங்கேயும் சென்று விடாதீர்கள். அடி விழப் போகிறது என்று ஜாலியாக கமெண்ட் அடித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.






