

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் நடிப்பை நடிகர் சல்மான் கான் வெகுவாகப் பாராட்டியுள்ளார். குறிப்பாக, ‘துரந்தர்’ திரைப்படத்தில் தனது வழக்கமான அதிரடியான நடிப்பைக் கட்டுப்படுத்தி, கதாபாத்திரத்துக்கு ஏற்றவாறு நடித்ததன் மூலம் ரன்வீர் சிங் தனது திறமையை நிரூபித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சல்மான் கானிடம், ‘அனிமல்’ படத்தில் ரன்பீர் கபூர் வெளிப்படுத்திய நடிப்பும், ‘துரந்தர்’ படத்தில் ரன்வீர் சிங் வெளிப்படுத்திய நடிப்பும் எதில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தின என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அவர், இருவரின் நடிப்பையும் ஒப்பிட முடியாது என்றும், இருவரும் சிறந்த நடிகர்கள் என்றும் தெரிவித்தார். இருவரும் வெவ்வேறு பாணிகளில் நடிப்பதாகக் குறிப்பிட்ட அவர், ரன்பீர் கபூரிடம் அபாரமான ஆற்றலும், ரன்வீர் சிங்கிடம் தீவிரமான நடிப்புத் திறனும் இருப்பதாகப் பாராட்டினார்.
மேலும், பொதுவாகத் தனது நடிப்பில் அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் ரன்வீர் சிங், ‘துரந்தர்’ படத்தில் அதைக் கட்டுப்படுத்தி நடித்திருப்பது அவரது தன்னம்பிக்கையை வெளிப்படுத்துவதாக சல்மான் கான் தெரிவித்தார். தனது இயல்பான நடிப்புப் பாணியைக் கட்டுப்படுத்துவது ஒரு நடிகருக்குத் தயக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ஆனால், ரன்வீர் சிங் எந்தத் தயக்கமும் இன்றி கதாபாத்திரத்துக்கு ஏற்றவாறு நடித்துள்ளதாகவும் அவர் பாராட்டினார்.