"எந்திரன்" பட கதை வழக்குகள்: ஐகோர்ட்டு புதிய உத்தரவு

எந்திரன் கதை விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் இருக்கும் 3 வழக்குகளையும் ஒன்றாக ஒரே டிவிசன் பெஞ்ச் விசாரிக்கலாம்.
சென்னை,
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் எந்திரன். இந்த திரைப்படத்தின் கதை தன்னுடையது என்று தமிழ்நாடன் என்பவர் எழும்பூர் கோர்ட்டில் ஷங்கருக்கு எதிராக அவர் வழக்கு தொடர்ந்தார். மேலும் அந்த கதை தன்னுடையது என்று அறிவிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் தனியாக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடன் மேல்முறையீடு செய்துள்ளார். அந்த வழக்கு டிவிசன் பெஞ்சில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையில், தனி நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து விட்டதால், எழும்பூர் கோர்ட்டில் உள்ள வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில், ஷங்கர் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த கோர்ட்டு, எழும்பூர் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. அந்த வழக்கும் தனி நீதிபதி முன்பு நிலுவையில் இருந்து வருகிறது.
இந்தநிலையில், சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை உத்தரவிட்டதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஷங்கர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமிநாராயணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், எந்திரன் கதை விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் இருக்கும் 3 வழக்குகளையும் ஒன்றாக ஒரே டிவிசன் பெஞ்ச் விசாரிக்கலாம். இதற்கு தலைமை நீதிபதியிடம் முறையான அனுமதியினை பெறுவதற்காக இந்த வழக்கை ஐகோர்ட்டு பதிவுத்துறை பதிவாளருக்கு அனுப்பி வைக்கிறோம் என்று உத்தரவிட்டனர்.






