

ஒரு படத்தில் நடிக்கத் தேர்வு செய்யப்படுவதற்கு ஆடிஷன் என்பது இயல்பான நடைமுறை எனக் குறிப்பிட்டார். இதுவரை பல படங்களில் நடித்திருந்தாலும், முன்னணி நடிகை என்பதற்காக ஆடிஷனில் இருந்து விலக்கு அல்லது சலுகையை எதிர்பார்ப்பதில்லை என்றார்
‘ஸ்டார்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை பிரீத்தி முகுந்தன், தற்போது தென்னிந்தியத் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராகத் திகழ்கிறார். முதல் படத்துக்குப் பிறகு ‘நாக்ஜில்லா’, ‘கண்ணப்பா’, ‘சர்வம் மாயா’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிப் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
சமீபத்தில் வெளியான ‘அன்பில் அவன்’ படத்தில் நடித்திருந்த பிரீத்தி முகுந்தன், அடுத்ததாக தனுஷின் 56-வது படமான ‘டி56’ திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் பூஜை அண்மையில் சிவகங்கையில் நடைபெற்றது. இதில் பிரீத்தி முகுந்தனும் கலந்து கொண்டார்.
இந்நிலையில், தனுஷ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய பிரீத்தி முகுந்தன், அந்தப் படத்திற்காக முறையாக ஆடிஷனில் பங்கேற்றதாகத் தெரிவித்துள்ளார்.
ஒரு திரைப்படத்தைத் தேர்வு செய்யும்போது, இயக்குநர் கதையை விவரிக்கும் விதம் தனக்கு முக்கியமானதாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், கதாநாயகியின் கதாபாத்திரத்துக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதா என்பதையும் கவனிப்பதாகக் கூறினார். திரைத்துறையின் ஆரம்பகாலத்தில் சில கதைகளைத் தவறாகத் தேர்வு செய்ததாகவும், அனுபவத்தின் மூலம் சரியான கதைகளைத் தேர்ந்தெடுக்கக் கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஒரு படத்தில் நடிப்பதற்கான தேர்வில் ஆடிஷன் என்பது இயல்பான நடைமுறை என்றும், பல படங்களில் நடித்திருந்தாலும் முன்னணி நடிகை என்பதற்காக ஆடிஷனில் இருந்து விலக்கு அல்லது சலுகையை எதிர்பார்ப்பதில்லை என்றும் ப்ரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார். தனுஷின் படத்திற்காகவும் ஆடிஷனில் பங்கேற்றுத் தேர்வானதாக அவர் கூறியிருப்பது கவனம் பெற்றுள்ளது.