

இந்தி சினிமாவின் திரைக்கதை ஜாம்பவான் என்று அழைக்கப்படுபவர், பிரயாக் ராஜ். 'தரம்வீர்', 'மர்ட்', 'அஜூபா', 'அல்லா ரக்கா' உள்ளிட்ட பல வெற்றிப்படங்களுக்கு திரைக்கதை எழுதி உள்ளார். அமிதாப் பச்சன் நடித்து சூப்பர் ஹிட்டான 'அமர் அக்பர் அந்தோணி', 'கூலி' ஆகிய படங்களுக்கு திரைக்கதை எழுதியதின் மூலம் பல விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, கோவிந்தா நடித்த 'கெயர் கானோனி', அமிதாப் பச்சன், கமல்ஹாசன் நடித்த 'ஜெராப்தார்' உள்ளிட்ட பல இந்தி படங்களையும் இயக்கியுள்ளார். பல நூல்களையும் எழுதியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பிரயாக் ராஜ், ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் சிகிச்சை பலன் இன்றி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது இல்லத்தில் பிரயாக் ராஜ் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 77. பிரயாக் ராஜின் மறைவுக்கு நடிகர் - நடிகைகளும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.