

ஆர்ஜே பாலாஜி ‘ஜெயிலர் 2’ திரைப்படம் குறித்து பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமான ‘ஜெயிலர் 2’ இன்று உலகளவில் வெளியானது. மீண்டும் ரஜினிகாந்த் - நெல்சன் திலீப்குமார் கூட்டணி இணைந்துள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது.
இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் சிறப்புத் தோற்றங்களில் நடித்துள்ளனர். மேலும், ரம்யா கிருஷ்ணன், மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. கர்நாடகா, ஐதராபாத், கேரளா உள்ளிட்ட இடங்களில் அதிகாலையிலேயே சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டன.
தமிழகத்தில் காலை 9 மணி முதல் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் திரையிடப்பட்டது. இதையொட்டி, சென்னையில் உள்ள ரோஹிணி திரையரங்கிற்கு ரஜினிகாந்தின் குடும்பத்தினர் வருகை தந்தனர். நடிகர் தனுஷும் அதே திரையரங்கிற்கு வருகை தந்து ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தைப் பார்த்தார். இதனால் ரோஹிணி திரையரங்கில் ரசிகர்களின் உற்சாகம் அதிகரித்தது.
இப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்துகொண்டிருப்பதால் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நடிகரும் இயக்குநருமான ஆர்ஜே பாலாஜி பதிவொன்றை வெளியிட்டுள்ளார். இதில், “5 தசாப்தங்கள்... தலைவர் திரைப்படம் வெளியானால் இப்போதும் அதே உணர்வைத் தருகிறது. சூப்பர் ஸ்டார்...!” என பதிவிட்டுள்ளார்.