மோடி மற்றும் பா.ஜ.க. அரசுக்கு உணவு கொடுப்பதை விவசாயிகள் நிறுத்த வேண்டும் - நடிகர் கிஷோர்

பஞ்சாப் விவசாயிகளுக்கு ஆதரவாக நடிகர் கிஷோர் குரல் கொடுத்துள்ளார்.
மோடி மற்றும் பா.ஜ.க. அரசுக்கு உணவு கொடுப்பதை விவசாயிகள் நிறுத்த வேண்டும் - நடிகர் கிஷோர்
Published on

சென்னை,

வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம் கொண்டுவர வேண்டும் மற்றும் வேளாண் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாய சங்கங்கள் டெல்லி நோக்கி பேரணி நடத்தும் போராட்டத்தை கடந்த 13-ந் தேதி தொடங்கி நடத்தி வருகின்றனர்.

ஆனால், பஞ்சாப்பில் இருந்து புறப்பட்ட விவசாயிகள், பஞ்சாப்-அரியானா இடையே ஷம்பு, கானாரி ஆகிய இடங்களில் உள்ள எல்லைகளில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இரு இடங்களிலும் பல அடுக்கு தடுப்புகள் போடப்பட்டுள்ளன. தடுப்புகளை அகற்ற முயன்ற விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி அவர்களை தடுத்து வருகின்றனர். போலீசாரால் வீசப்பட்ட கண்ணீர் புகைக் குண்டு வெடித்து, சுப்கரன் சிங் (24) என்னும் இளம் விவசாயி உயிரிழந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்த அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.

இந்த நிலையில் பஞ்சாப் விவசாயிகளுக்கு ஆதரவாக நடிகர் கிஷோர் குரல் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில் ,

"நியாயமான விலை கேட்பது இவ்வளவு அநியாயமா? அதிகபட்ச ஆதார விலை உறுதியளித்து ஆட்சிக்கு வந்த பாசாங்குத்தனமான அரசியல்வாதிகள் ஒருபுறம் இருக்கட்டும், ஆனால் அந்த பக்தர்களும், விவசாயிகள் விளைவித்த உணவை உண்டு உயிரோடு இருக்கும் மன்னனின் ஊடகங்களும் அதே விவசாயிகளை துரோகிகள் என்று முத்திரை குத்துகின்றன, இவர்களை எப்படி இந்தியர்கள் என்று சொல்ல முடியும்? சாலைகள் தோண்டப்பட்டது, சுவர்கள் கட்டப்பட்டது, தோட்டாக்கள் வீசப்பட்டது, கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டது, அனைத்தையும் செய்தது மோடியின் அரசு.

தினம் தினம் வார்த்தை மாறும், ஆனால், தேச விரோத முத்திரை விவசாயிகளின் தலையில் உள்ளது. விவசாயிகளுக்கு எதிராக பொய்யான வதந்திகளைப் பரப்பும் மோடிக்கும், அவரது அரசுக்கும், அவரது பக்தர்களுக்கும் உணவு கொடுப்பதை விவசாயிகள் முதலில் நிறுத்த வேண்டும். ஆனால், இந்த நன்றிகெட்ட மக்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசிய காவல்துறையினருக்கும் தொடர்ந்து உணவு அளிக்கும் நமது கருணையுள்ள விவசாயிகளைப் பாருங்கள். நமது விவசாயிகள் தேச விரோதிகள் என்ற முத்திரைக்கு தகுதியானவர்களா?" என்று அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com