

சென்னை,
சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ஜி.வி. பிரகாஷ், தான் இசையமைத்த ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘மதராசப்பட்டினம்’, ‘அங்காடித்தெரு’, ‘வெயில்’, ‘காக்கா முட்டை’, ‘ஆடுகளம்’, உள்ளிட்ட படங்களுக்கு தேசிய விருது கிடைக்கும் என தான் எதிர்பார்த்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர். ரகுமானின் சகோதரி ஏ.ஆர். ரெஹைனாவின் மகனான ஜி.வி. பிரகாஷ், சிறுவயதிலேயே ரகுமான் இசையமைத்த பல பாடல்களில் தனது குரலை பதிவு செய்துள்ளார். பின்னர், இயக்குநர் வசந்தபாலன் இயக்கிய ‘வெயில்’ திரைப்படத்தின் மூலம் தனது 19-வது வயதில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஜி.வி. பிரகாஷ், இதுவரை 120-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும், 500-க்கும் அதிகமான பாடல்களை உருவாக்கியுள்ள அவர், சுமார் 100 பாடல்களையும் பாடியுள்ளார்.
‘சூரரைப் போற்று’, ‘வாத்தி’, ‘அமரன்’ உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
இசையமைப்பாளராக மட்டுமின்றி நடிகராகவும் ஜி.வி. பிரகாஷ் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். ‘டார்லிங்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அவர், இதுவரை 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘இம்மார்ட்டல்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ஜி.வி. பிரகாஷ், தான் இசையமைத்த எந்தெந்த படங்களுக்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்த்தார் என்பது குறித்து மனம் திறந்துள்ளார்.
‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘மதராசப்பட்டினம்’, ‘அங்காடித்தெரு’, ‘வெயில்’, ‘காக்கா முட்டை’, ‘ஆடுகளம்’, ‘பொல்லாதவன்’, ‘விசாரணை’, ‘மயக்கம் என்ன’ உள்ளிட்ட படங்களுக்கு தேசிய விருது கிடைக்கும் என தான் எதிர்பார்த்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், எதிர்பார்த்த சில படங்களுக்கு விருது கிடைக்காத நிலையில், பின்னர் ‘சூரரைப் போற்று’, ‘வாத்தி’, ‘அமரன்’ ஆகிய படங்களுக்காக தனக்கு தேசிய விருது கிடைத்ததாக ஜி.வி. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
தனது இசைப் பயணத்தில் விருதுகளுக்கு அப்பாற்பட்டு, ரசிகர்களிடம் கிடைக்கும் வரவேற்பும் தனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.