

காதல், டேட்டிங் செயலிகள், உறவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் உள்ளிட்ட தற்காலக் காதல் குறித்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ள கருத்துகள் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் அர்ஜுன் தாஸ் இணைந்து நடித்துள்ள புதிய ரொமாண்டிக் வெப் தொடர் ‘லவ்’. நவீன காதல் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த தொடரை இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கியுள்ளார்.
டேட்டிங் ஆப் உலகை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த தொடரில், ஐஸ்வர்யா லட்சுமி 'தாரா' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அர்ஜுன் தாஸ் 'மேத்யூ ஜெபராஜ்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். காதலில் ‘கெமிஸ்ட்ரி’ முக்கியமா அல்லது ‘காம்பாட்டிபிலிட்டி’ எனப்படும் பொருத்தம் முக்கியமா? என்ற விவாதத்தை மையமாக வைத்து இருவருக்கும் இடையிலான இந்த கதை நகர்கிறது.
இத்தொடரை இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கியுள்ள நிலையில், சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ளார். ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் அர்ஜுன் தாஸ் இணைந்து நடிக்கும் முதல் வெப் தொடராகவும் இதுவாகும்.
நகைச்சுவை - காதல் தொடரான ‘லவ்’ ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது.
இந்த நிலையில், ‘லவ்’ வெப் தொடர் புரமோஷனுக்காக நேர்காணலில் பங்கேற்ற நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தற்கால காதல்களின் போக்கு குறித்து பேசியுள்ளார்.
“இன்று டேட்டிங் செயலிகள் அதிகம் வந்துவிட்டன. அதன் மூலம் நமக்குத் தேவையான துணைகளைச் சுலபமாகத் தேடவும் முடியும். ஆனால், அதில் சரியான துணையைக் கண்டுபிடிப்பது எளிமையானது அல்ல. தேர்வுகள் அதிகரிக்கும் போது நாம் உண்மையிலேயே குழம்பி விடுகிறோம். கடந்த காலங்களை ஒப்பிட இப்போது அந்தத் தேர்வுகள் அதிகரித்துள்ளதால் சரியான நபர்களைக் கண்டுபிடிக்க முடிவதில்லை. இது இக்காலத்தின் சிக்கல்.
காலங்கள் செல்லச் செல்ல காதல் குறித்த என் பார்வைகளும் மாறி வருகின்றன. ஒருவர் முன் முழுமையாக என்னை வெளிப்படுத்துவதும் அவரிடம் பாதுகாப்பாக இருக்கிறேன் என்பதையும் உணர்ந்தால் அது நல்ல காதல். என் மனதில் உள்ளதைச் சொல்லவும் நான் எப்படி இருக்கிறேனோ, அப்படியே ஏற்றுக்கொள்ளப்படவும் வேண்டும். சொல்லப்போனால், அப்படி ஒருவர் முன் என்னால் குழந்தையாகவும் இருக்க முடிய வேண்டும்.
இன்றைய தலைமுறை உறவுகளை வர்ணிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் புதிய சொற்களும் குழப்பத்தை மேலும் கூட்டுகின்றன. காலம் செல்லச் செல்ல காதல் குறித்த எனது பார்வையும் மாறியுள்ளது. காதல் என்பது நிம்மதியும் பாதுகாப்பும் ஆகும். மற்றொருவர் முன்னிலையில் நான் நானாகவே இருக்க முடிவது முக்கியம். என்னை பொறுத்தவரை காதல் என்றால் அது ‘கம்ஃபர்ட்’ தான். ஒரு துணையிடம் நான் முதன்மையாக எதிர்பார்ப்பது பாதுகாப்பான உணர்வை. காதல் உறவில் நட்புக்கும் மிக முக்கிய இடமுண்டு. திருமணமான எனது நண்பர்களில் பலர் காதலர்களாக மாறுவதற்கு முன்பு நல்ல நண்பர்களாக இருந்தனர்.
திரைப்படங்களில் தீவிரமான காதல் கதைகளில் நடிக்க விரும்பினாலும் நிஜ வாழ்க்கையில் மகிழ்ச்சியான, எளிமையான காதல் கதைகள்தான் எனக்குப் பிடிக்கும். வலிகள் நிறைந்த காதல் கதைகளைக் கண்டு சோர்ந்துவிட்டேன்” என தெரிவித்துள்ளார்.