ரூ.75 முதல் ரூ.3,000 கோடி வரை... சல்மான் கானின் அறியப்படாத வாழ்க்கைப் பயணம்

இன்று கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகளைக் கொண்ட முன்னணி நட்சத்திரமாக இருக்கும் சல்மான் கானின் ஆரம்பகால வாழ்க்கை அவ்வளவு எளிதானதாக இருந்ததில்லை.
ரூ.75 முதல் ரூ.3,000 கோடி வரை... சல்மான் கானின் அறியப்படாத வாழ்க்கைப் பயணம்
Published on: 

மும்பை,

வெறும் ரூ.75-ல் தனது முதல் சம்பளத்தை பெற்றவர், இன்று ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளைக் கொண்ட நட்சத்திரமாக உயர்ந்திருப்பது அவரது திரைப்பயணத்தின் வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது.

சல்மான் கான்

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சல்மான் கான். இந்திய திரையுலகில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள அவர், நடிப்பைத் தாண்டி தயாரிப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல்வேறு துறைகளிலும் பயணித்து வருகிறார்.

பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த காலம்

இன்று கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகளைக் கொண்ட முன்னணி நட்சத்திரமாக இருக்கும் சல்மான் கானின் ஆரம்பகால வாழ்க்கை அவ்வளவு எளிதானதாக இருந்ததில்லை. சிறுவயதில் குடும்பச் சூழ்நிலை காரணமாக சரியான நேரத்தில் பள்ளிக் கட்டணத்தைச் செலுத்த முடியாத நிலை சல்மான் கானுக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், வகுப்பறைக்கு வெளியே நிற்க வைக்கப்பட்டதுடன், ஒரு கட்டத்தில் பள்ளியில் இருந்தே வெளியேற்றப்படும் நிலைக்கும் அவர் தள்ளப்பட்டுள்ளார்.

ரூ.75-ல் தொடங்கிய முதல் சம்பளம்

திரையுலகில் அறிமுகமாவதற்கு முன்பே சல்மான் கான் தனது 14-வது வயதில் மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடனக் கலைஞராக பங்கேற்றுள்ளார். அந்தப் பணிக்காக அவருக்கு கிடைத்த முதல் சம்பளம் வெறும் ரூ.75 மட்டுமே. பின்னர் உதவி இயக்குநராக பணியாற்றி தனது சினிமா பயணத்தைத் தொடங்கினார்.

முன்னணி நடிகராக உயர்வு

1988-ம் ஆண்டு வெளியான ‘பிவி ஹோ தோ ஐசி’ திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமான சல்மான் கான், அதன்பிறகு 1989-ம் ஆண்டு வெளியான ‘மைனே பியார் கியா’ திரைப்படத்தின் வெற்றியின் மூலம் முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து பாலிவுட்டின் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக உருவெடுத்தார். குறிப்பாக, ‘ஹம் ஆப்கே ஹைன் கௌன்’, ‘கரண் அர்ஜுன்’, ‘பஜ்ரங்கி பைஜான்’, ‘சுல்தான்’, ‘டைகர்’ உள்ளிட்ட திரைப்படங்கள் அவரது திரைப்பயணத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.

ரூ.3,000 கோடி சொத்து?

பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக தொடர்ந்து வருவதுடன், திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் சல்மான் கான் வருமானம் ஈட்டி வருகிறார். தற்போது அவருடைய மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.3,000 கோடி என பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. வெறும் ரூ.75-ல் தனது முதல் சம்பளத்தை பெற்றவர், இன்று ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளைக் கொண்ட நட்சத்திரமாக உயர்ந்திருப்பது அவரது திரைப்பயணத்தின் வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com