ஈவ்-டீசிங் செய்த வாலிபரின் தலையை உடைத்த கயாடு லோஹர்.. இணையத்தில் வைரலாகும் பேச்சு

கயாடு லோஹர், தனது பள்ளிப் பருவத்தில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
ஈவ்-டீசிங் செய்த வாலிபரின் தலையை உடைத்த கயாடு லோஹர்.. இணையத்தில் வைரலாகும் பேச்சு
Published on

கன்னட திரைப்படமான 'முகில்பேட்டை' மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை கயாடு லோஹர், தற்போது தென்னிந்திய திரையுலகின் கவனம் ஈர்த்துவரும் இளம் நடிகைகளில் ஒருவராக உள்ளார். மலையாளம், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் நடித்து வரும் அவர், தமிழில் பிரதீப் ரங்கநாதன் நடித்த 'டிராகன்' திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். தொடர்ந்து மலையாளத்தில் டொவினோ தாமஸுடன் நடித்த 'பள்ளிச்சட்டம்பி' திரைப்படமும் அவருக்கு பாராட்டுகளை பெற்றுத் தந்தது. தற்போது இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படத்திலும், நடிகர் சூர்யாவுடன் இணையும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கயாடு லோஹர், தனது பள்ளிப் பருவத்தில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

"தப்பு செய்தால் அமைதியாக இருக்கக் கூடாது"

இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, வீட்டிற்கு அருகே இருந்த டியூஷன் வகுப்புக்கு செல்வது வழக்கம். அப்போது ஒரு பையன் என்னை தொடர்ந்து ஈவ்டீசிங் செய்தான். முதல் நாளில் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இரண்டாவது நாளும் அதேபோல் நடந்தது. ஆனால், மூன்றாவது முறையும் அவன் எல்லை மீறியபோது எனக்கு கடுமையான கோபம் வந்தது. அப்போது அருகில் இருந்த ஒரு பெரிய கல்லை எடுத்து அவனது தலையில் வீசினேன். அவனுக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அதன்பிறகு நான் அங்கிருந்து உடனே சென்றுவிட்டேன்", என்று தெரிவித்தார்.

மேலும், "பார்ப்பதற்கு நான் மிகவும் அமைதியானவளாகத் தோன்றலாம். ஆனால், யாராவது தவறு செய்தால் அமைதியாக இருக்கக் கூடாது. அதற்கு எதிர்த்து நிற்க வேண்டும்; தேவையானால் திருப்பி அடிக்கவும் வேண்டும்", என்று கயாடு லோஹர் கூறியுள்ளார்.

நடிகையின் இந்த வெளிப்படையான பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com