

நடிகர் விஜய் நடித்த 'கில்லி' திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே 'கில்லி சிவா' என்று பிரபலமான நடிகர் சிவா, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இந்த செய்தி தமிழ் திரையுலகினரையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் சிவா, தமிழ் சினிமாவில் குறைந்த எண்ணிக்கையிலான படங்களில் நடித்திருந்தாலும், விஜய் நடித்த 'கில்லி' திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக படத்தின் தொடக்கக் காட்சியில் அவரது நடிப்பு பரவலாக பேசப்பட்டது. அதன்பிறகு ரசிகர்கள் அவரை 'கில்லி சிவா' என்றே அழைத்து வந்தனர்.
'கில்லி' படத்தைத் தொடர்ந்து நடிகர் சிவா, விஜய் நடித்த மேலும் சில திரைப்படங்களிலும் தோன்றியிருந்தார். சிறிய கதாபாத்திரங்களாக இருந்தாலும், அவரது இயல்பான நடிப்பு ரசிகர்களிடம் தனி அடையாளத்தை உருவாக்கியது.
நடிகர் சிவாவின் மறைவு செய்தி வெளியானதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் சமூக வலைத்தளங்கள் வாயிலாக ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். புற்றுநோயுடன் நீண்ட நாட்களாக போராடிய அவர் மறைந்தது, தமிழ் திரையுலகிற்கு மற்றொரு இழப்பாக பார்க்கப்படுகிறது.