

பெங்களூரு,
பெங்களூரு லாவல்லி ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ரன்யா ராவ். இவர், பிரபலமான நடிகை ஆவார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3-ந் தேதி துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்தபோது நடிகை ரன்யா ராவை டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்தார்கள். அவரிடம் இருந்து 14 கிலோ 213 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
அவர் மீது 'காபிபோசா' சட்டத்தின் கீழ் டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தார்கள். தங்கம் கடத்தலுக்கு, உதவி புரிந்ததாக அவரது காதலனும் தெலுங்கு நடிகருமான தருண் மற்றும் வியாபாரி ஷாகில் ஆகியோரும் கைது செய்யப்பட்டார்கள்.
தங்கம் கடத்தலுடன் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் நடிகை ரன்யா ராவ், தருண் ஆகியோர் ஈடுபட்டதால், அவர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. நடிகை ரன்யா ராவ் ஓராண்டு காலம் சிறைவாசம் அனுபவித்து வந்தார். இந்த நிலையில், தங்கம் கடத்தல் வழக்கில் ஜாமீன் கோரி பெங்களூரு பொருளாதார குற்றவியல் சிறப்பு கோர்ட்டில் ரன்யா ராவ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, ரன்யா ராவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.