

சென்னை,
நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படங்களில் ஒன்றாக உள்ளது. படத்தின் வெளியீட்டு தேதி குறித்து கடந்த சில மாதங்களாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது புதிய தகவல் ஒன்று ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'ஜனநாயகன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் தயாரிப்பு பணிகள் நிறைவடைந்திருந்தாலும், இதுவரை படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது.
முன்னதாக, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி ஜூன் 19 அல்லது ஜூன் 22-ஆம் தேதி வெளியாகும் என்றும் தகவல்கள் பரவின. ஆனால், சென்சார் நடைமுறைகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக அந்தத் திட்டம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது.
இதற்கிடையில், படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஜூலை 16 அல்லது 23-ஆம் தேதி வெளியிடப்படலாம் என்றும் தகவல்கள் வெளியானது. ஆனால், இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இந்த நிலையில், 'ஜனநாயகன்' திரைப்படம் ஜூலை 24-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் படத்தை வெளியிடும் விநியோகஸ்தர்கள் தங்களது சமூக வலைதளப் பதிவுகளில், ஜூலை 24 வெளியீட்டை மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளனர். அதேபோல், இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகளின் விநியோகஸ்தர்களும் படத்தின் வெளியீட்டுக்கான ஏற்பாடுகளைத் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
இருப்பினும், படத்தை தயாரித்துள்ள கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் இதுவரை வெளியீட்டு தேதி தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால், 'ஜனநாயகன்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.