ஆளுநர் அவர்களே, விஜய்யை ஆட்சி அமைக்க கூப்பிடுங்க - இயக்குநர் பா ரஞ்சித்

முதல் தேர்தலிலேயே வெற்றி வாகை சூடி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக த.வெ.க. உயர்ந்துள்ளது.
ஆளுநர் அவர்களே, விஜய்யை ஆட்சி அமைக்க கூப்பிடுங்க - இயக்குநர் பா ரஞ்சித்
Published on

தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றியது. த.வெ.க.வுக்கு காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், மற்ற கட்சிகள் த.வெ.க.வுக்கு இன்னும் ஆதரவு கொடுக்கவில்லை. முன்னதாக, த.வெ.க. தலைவர் விஜய், நேற்று முன்தினம் மாலை தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகரை சந்தித்தார். அப்போது தங்களை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி கவர்னரிடம் கடிதம் வழங்கினார். ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் விஜய்க்கு இல்லாததால், அவரை ஆட்சியமைக்க வரும்படி கவர்னர் அழைக்கவில்லை. பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை பெறுவதற்கு வி.சி.க., கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு த.வெ.க. அழைப்பு விடுத்தது. இது குறித்து முடிவு செய்ய சம்பந்தப்பட்ட கட்சியினர் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர்.

ஆட்சி அமைக்க ஆளுநரைச் சந்தித்து உரிமை கோரிய பின்னரும் ஆளுநர் விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. இதற்கு திமுக கூட்டணிக் கட்சிகள் தொடங்கி பலரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இந்நிலையில், இயக்குநரும் தயாரிப்பாளருமான பா.ரஞ்சித் தனது எக்ஸ் பக்கத்தில் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பாக விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்காத ஆளுநரைக் கண்டித்து பகிர்ந்துள்ள பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

பா. ரஞ்சித் வெளியிட்டுள்ள பதிவில், “நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திரு ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக வெற்றிப்பெற்றிருக்கிறது. காங்கிரஸ் ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழகம் மட்டுமே ஆட்சியமைக்க உரிமைகோரிய நிலையில் தமிழக ஆளுநர் (பொறுப்பு) திருமிகு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்னமும் தவெக தலைமையை ஆட்சியமைக்கவும் அவர்களுடைய பெரும்பான்மையைச் சட்டமன்றத்தில் நிரூபிக்கவும் அழைப்பு விடுக்காதது கடும் கண்டனத்திற்குரியது. மக்கள் வழங்கிய ஜனநாயகத் தீர்ப்பை மதித்து, எவ்விதக் காலதாமதமுமின்றித் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சியமைக்க ஆளூநர் உடனடியாக அழைப்பு விடுக்க வேண்டும். அதே வேளையில், ஜனநாயகத்தின் நம்பிக்கையையும், மக்களின் வாக்குரிமையின் மதிப்பையும் காக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்துகிறது” என்று பதிவிட்டுள்ளார், இவரது இந்த பதிவுக்கு விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக ஆதரவாளர்கள் பலரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றதும் விஜய்க்கும் அவரது கட்சிக்கும் வாழ்த்தியும் பா. ரஞ்சித் பதிவிட்டிருந்தார். அதில், " சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிப் பெற்றிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அதன் தலைவர் திரு. விஜய் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். ஆண்டாண்டு காலமாக சாதி பார்த்து வேட்பாளர்கள் தேர்வு செய்யும் முறையயும், பணபலம் உள்ளவர்கள் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும் எனும் கருத்தாக்கத்தையும் இந்த வெற்றி உடைத்திருக்கிறது. மக்களுடைய பெருவாரியான அன்பையும் நம்பிக்கையும் பெற்றிருக்கிறீர்கள். அவர்களின் தேவையை உணர்ந்து அதனை நிறைவேற்றும் அரசாக உங்கள் அரசு செயலாற்ற வேண்டும் என நம்புகிறேன். வாழ்த்துகள்" என பதிவிட்டிருந்தார்.

இப்படியான நிலையில் விஜய்யை முதலமைச்சராக ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்காமல் இருப்பதனால் அதைக் கண்டித்தும் பதிவிட்டுள்ளார் பா. ரஞ்சித்.

X

Daily Thanthi
www.dailythanthi.com