நடிகர் ரவிமோகன் படம் தொடர்பான தகவலை பரப்ப தடை ஐகோர்ட்டு உத்தரவு

மிராக்கிள் மூவிஸ் நிறுவனம் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என ரவிமோகன் மனு தாக்கல் செய்துள்ளார்.
நடிகர் ரவிமோகன் படம் தொடர்பான தகவலை பரப்ப தடை ஐகோர்ட்டு உத்தரவு
Published on: 

சென்னை,

'ப்ரோ கிளப்' படம் தொடர்பான தகவல்களை பரப்ப மிராக்கிள் மூவிஸ் நிறுவனத்திற்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

ரவி மோகனின் 'ப்ரோ கிளப்'

தமிழ் சினிமா முன்னணி நடிகர் ரவிமோகன். இவர் தனது ரவி மோகன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் 'ப்ரோ கிளப்' என்ற படத்தை தயாரித்துள்ளார். இதில் ரவி மோகன், எஸ்.ஜே. சூர்யா மற்றும் அர்ஜுன் அசோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ கௌரி பிரியா, மாளவிகா மனோஜ், உபேந்திர லிமாயே, ஐஸ்வர்யா ராஜ் மற்றும் யோகி பாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

முதலில் இப்படம் முதலில் 'ப்ரோ கோட்' என்ற தலைப்பிடப்பட்டிருந்தது. பின்னர் ஒரு சில பிரச்சினைகள் காரணமாக இந்த படத்தின் டைட்டில் 'ப்ரோ கிளப்' என மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் இப்படம் தியேட்டர்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை ஐகோர்ட்டில் மனு

இந்த நிலையில், ரவிமோகன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "நான் நடித்து தயாரிக்கும் 'ப்ரோ கிளப்' படத்தின் உரிமைகள் தங்களிடம் உள்ளதாக மிராக்கிள் மூவிஸ் நிறுவனம் பொய்யான தகவலை பரப்பி வருகிறது. இது படத்தின் பதிப்புரிமையை மீறும் செயலாகும். எனவே, இதுபோன்ற தகவல்களை பரப்ப தடை விதிக்க வேண்டும். படத்தின் எங்களது உரிமையின் மதிப்பைக் குறைக்கும் வகையில் தவறான தகவலை வெளியிட தடை விதிக்க வேண்டும். ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

நவம்பர் 3-ந்தேதிக்குள் பதில்

இந்த வழக்கு நீதிபதி பி.பி.பாலாஜி முன் விசாரணைக்கு வந்தபோது, படத்தின் பெயரை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவு செய்தது குறித்த கடிதம் ரவிமோகன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. கடிதத்தை ஆய்வு செய்த நீதிபதி, "படத்தின் பதிப்புரிமையை மிராக்கிள் மூவிஸ் நிறுவனம் மீறியுள்ளது. எனவே, இந்த படம் தொடர்பான தகவல்களை பரப்ப அந்த நிறுவனத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கிறேன். இந்த மனுவுக்கு வருகிற நவம்பர் 3-ந்தேதிக்குள் அந்த நிறுவனம் பதிலளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com