"லீடர்" படத்தை சட்டவிரோதமாக வெளியிட வலைதளங்களுக்கு தடை - ஐகோர்ட்டு உத்தரவு

புதிய திரைப்படங்கள் வெளியான அடுத்த சில மணி நேரத்துக்குள் சட்டவிரோதமாக வலைதளங்கள் வெளியிடுகின்றனர்.
"லீடர்" படத்தை சட்டவிரோதமாக வெளியிட வலைதளங்களுக்கு தடை - ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், தொழிலதிபரும், நடிகருமான லெஜண்ட் சரவணன் தாக்கல் செய்துள்ள மனுவில், "லீடர் என்ற திரைப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ளேன். இந்த திரைப்படத்தில் ஷாம், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் தமிழ்நாடு உள்பட உலகம் முழுவதும் 500 தியேட்டர்களில் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகிறது.

இந்த படத்தின் காப்புரிமை அனைத்தும் என்னிடம்தான் உள்ளது. பொதுவாக புதிய திரைப்படங்கள் வெளியான அடுத்த சில மணி நேரத்துக்குள் சட்டவிரோதமாக அந்த படத்தை வலைதளங்கள் வெளியிடுகின்றன. இதனால், தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. இந்த வலைதளங்களின் விவரங்களை தாக்கல் செய்துள்ளேன். நான் நடித்து, தயாரித்துள்ள லீடர் திரைப்படத்தை இந்த வலைதளங்கள் சட்டவிரோதமாக வெளியிட தடை விதிக்கவேண்டும். லீடர் படத்தை இந்த வலைதளங்கள் வெளியிடாமல் தடுக்க தகுந்த நடவடிக்கையை எடுக்கும்படி பி.எஸ்.என்.எல்., ஏர்டெல் உள்ளிட்ட இணையதள சேவைநிறுவ னங்களுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, லீடர் படத்தை இணையதளங்கள் சட்டவிரோதமாக பதிவேற்றம் செய்து வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com