"கும்கி 2" திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை - ஐகோர்ட்டு உத்தரவு


கும்கி 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை - ஐகோர்ட்டு உத்தரவு
x

கும்கி 2 திரைப்படத்தை வருகிற டிசம்பர் 3-ந்தேதி வரை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

நடிகர் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடிப்பில், இயக்குனர் பிரபு சாலமன் இயக்கிய கும்கி என்ற திரைப்படம் கடந்த 2012-ம் ஆண்டு வெளியானது. 13 ஆண்டுகளுக்கு பின் தற்போது கும்கி-2 என்ற திரைப்படத்தை பிரபு சாலமன் தயாரித்து இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், இந்த படத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில், சினிமா பைனான்சியர் சந்திரபிரகாஷ் ஜெயின் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘‘கும்கி 2 படத்தை தயாரிக்க, பிரபு சாலமன் 2018-ம் ஆண்டு ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் கடன் பெற்றார்.

அப்போது செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, கும்கி 2 திரைப்படம் வெளியிடுவதற்கு முன்பு வட்டியுடன் கடன் தொகை ரூ.2.50 கோடி திருப்பி தருவதாக கூறியிருந்தார். ஆனால், அந்த தொகையை திருப்பி தராமல் படத்தை வெளியிட போவதாக அறிவித்துள்ளார். இந்த திரைப்படம் வெளியானால் எனக்கு வரவேண்டிய பணத்தை வசூலிக்க முடியாது. அதனால் படத்துக்கு தடை விதிக்கவேண்டும்'' என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் விசாரித்தார். மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் அபுடுகுமார் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, கும்கி 2 திரைப்படத்தை வருகிற டிசம்பர் 3-ந்தேதி வரை வெளியிட இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

1 More update

Next Story