

ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் ‘மகாராஜா’ படத்தையும் சாச்சனாவையும் புகழ்ந்து பேசியதற்கு நடிகர் விஜய் சேதுபதி மகிழ்ச்சி தெரிவித்தார்.
நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த ‘மகாராஜா’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. இது விஜய் சேதுபதியின் 50 ஆவது திரைப்படமாகும். இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். திரையரங்க வெளியீட்டிலேயே இப்படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப்படமானது. ஒரு குப்பைத்தொட்டியையும் அதன் பின் இருக்கும் எமோஷனலாக கதையையும் மையமாக வைத்து படத்தின் கதை எழுதப்பட்டிருந்தது.
‘மகாராஜா’ படத்தைப் பாராட்டி பேசிய ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் கிளைமேக்ஸ் காட்சியில், “இன்னும் என்னால் அப்பெண்ணின் நடிப்பிலிருந்து வெளியேற முடியவில்லை. என்னவொரு அசாதாரணமான நடிகை! என்னால் இப்படி நடிக்க முடியாது. நானாக இருந்திருந்தால் அவனைக் கொன்றிருப்பேன்” எனத் தெரிவித்தார்.
எம்மி விருது விழாவில் பங்கேற்ற விஜய் சேதுபதி சென்னைக்குத் திரும்பினார். ‘மகாராஜா’ படத்தை ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் பாராட்டியது தொடர்பான கேள்விக்கு, “எங்கள் நண்பர் கவிதா குப்தா டாம் ஹாங்க்ஸிடம் பேசியிருக்கார். அப்போது 3 இந்திய படங்களை டாம் ஹாங்க்ஸிற்கு கவிதா குப்தா பரிந்துரைத்திருக்கார். அதில் ‘மகாராஜா’ படமும் ஒன்று. படம் பார்த்துவிட்டு மீண்டும் கவிதா குப்தாவிடம் டாம் ஹாங்ஸ் பேசியிருக்கார். அப்போதுதான் பாராட்டியிருக்கார். அதை கேள்விபட்ட போது அதிர்ச்சியாவும் சந்தோஷமாவும் இருந்தது. நான் டாம் ஹாங்க்ஸின் ரசிகன். ‘காஸ்ட் அவே’ படத்தில் அவருடைய நடிப்பு தனக்கு மிகவும் பிடிக்கும். அவர் நமது படத்தைப் பார்த்து, பாராட்டியிருப்பது மிகவும் பெரிய விஷயம்” என்று பதிலளித்துள்ளார்.
இந்தப் பாராட்டு குறித்துப் பேசிய நடிகை சாச்சனா நமிதாஸ், “இது தனக்கு ஒரு கனவு போல இருப்பதாக” தெரிவித்துள்ளார். ஏற்கனவே இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை வென்ற சாச்சனாவுக்கு, தற்போது ஹாலிவுட்டில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.