

நா ஹாங் ஜின் இயக்கத்தில் வெளியான ஹாலிவுட் திரைப்படமான ‘ஹோப்’, உலகம் முழுவதும் ரூ.1,500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து கவனம் ஈர்த்துள்ளது.
மர்மமான உயிரினம் ஒன்று கிராமத்துக்குள் நுழைந்து அழிவை ஏற்படுத்துகிறது. அந்த உயிரினத்திடம் இருந்து மக்களைக் காப்பாற்ற காவல்துறையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. விறுவிறுப்பான காட்சிகளுடன் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.
நா ஹாங் ஜின் இயக்கியுள்ள இப்படத்தில் ஹ்வாங் ஜங்-மின், ஜோ இன்-சுங், ஹோயி யோன், மைக்கேல் பாஸ்பெண்டர், அலிசியா விகாண்டர், டெய்லர் ரஸ்ஸல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
உலகம் முழுவதும் இப்படத்தின் வசூல் ரூ.1,500 கோடியைத் தாண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கேன்ஸ் திரைப்பட விழாவிலும் இப்படம் திரையிடப்பட்டது. அமெரிக்காவில் வெளியான சர்வதேசத் திரைப்படங்களிலேயே அதிக வசூல் ஈட்டிய படங்களில் ஒன்றாக ‘ஹோப்’ கவனம் பெற்றுள்ளது. இப்படத்துக்குக் கிடைத்துள்ள வரவேற்பைத் தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகம் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.