

சென்னை,
நீட் தேர்வு முறைகேடு விவகாரம் நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகை மஞ்சு வாரியர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு கவனம் ஈர்த்துள்ளது. கல்வி அமைப்பின் மீதான நம்பிக்கையை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.
சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், அரசியலை விட மனிதநேயமே எப்போதும் வெல்ல வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், கேள்விகள் கேட்கவும், தங்களது கவலைகளை வெளிப்படுத்தவும், முறையான உரையாடலை எதிர்பார்க்கவும் நாட்டின் இளைஞர்களுக்கு முழு உரிமை உண்டு. இந்தியா முழுவதும் தேர்வு முறையின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், கல்வி அமைப்பின் மீதான நம்பிக்கை வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நியாயம் ஆகியவற்றின் மூலமே வலுப்பெறும் என்றும் மஞ்சு வாரியர் கூறியுள்ளார்.
திறமைக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும், உண்மைகளுக்கே மதிப்பு இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். நமது மாணவர்களுக்கு பயம் நிறைந்த சூழல் அல்ல, நம்பிக்கையும் நியாயமும் நிறைந்த எதிர்காலமே தேவை என்றும் மஞ்சு வாரியர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.