நடிப்புக்காக எவ்வளவு கஷ்டப்படவும் தயாராக இருக்கிறேன்- நிமிஷா சஜயன்

என்னை பொறுத்தவரை நல்ல விமர்சனங்கள் எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்வேன் என்று நிமிஷா சஜயன் கூறியுள்ளார்.
சென்னை,
மலையாள சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலிக்கும் நிமிஷா சஜயன், `சித்தா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனார். தனது இயல்பான நடிப்பால் தமிழ் ரசிகர்களை கவர்ந்த நிமிஷா சஜயன், அதர்வாவுடன் இணைந்து நடித்த `டி.என்.ஏ.' படம் அவரது திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்தது. சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறிய சில தக்வல்கள் வருமாறு:-
சீரியசான கதாபாத்திரங்களில் என் கதாபாத்திரத்தை சுற்றியே படம் நகருகிறது எனும்போது, அப்படிப்பட்ட கதைகள் நடிப்பதில் தவறில்லையே. படங்களில் என் கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் எனக்கு கவலையில்லை. கதைக்கு தாக்கம் ஏற்படுத்தும் வகையில் என் கதாபாத்திரமும், என் நடிப்பும் இருக்கிறதா? என்பதே எனக்கு முக்கியம்.
விமர்சனங்கள் என்னை ஒருபோதும் பாதித்தது கிடையாது. என்னை பொறுத்தவரை நல்ல விமர்சனங்கள் எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்வேன். தவறு என்றால் என்னை நானே மாற்றிக்கொள்வேன். மற்றபடி, என்னை நோக்கி வரும் ஏடாகூடமான விமர்சனங்களை நான் கண்டுகொள்வதே கிடையாது.
டி.என்.ஏ.' படத்தில் எனக்கு அம்மா கதாபாத்திரம். ஆனால் எனக்கு திருமணம் ஆகவில்லை. எனவே கதைக்கு ஏற்றபடி என்னை நான் தயார்படுத்திக் கொள்வேன். அதற்கான எமோஷனலை எனக்குள் நானே ஏற்படுத்திக் கொள்வேன். நடிப்பு என்பது தவம். அதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் என்னை வருத்தி உழைக்கத் தயார். அந்த படத்தில் என் நடிப்பு சிறப்பாக இருப்பதாக அனைவருமே பாராட்டும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. பெரிய பட்ஜெட் படங்கள் வெற்றியடைவது பெரிய விஷயமல்ல. சிறிய பட்ஜெட் படங்கள் ஹிட் அடிப்பது மிகவும் முக்கியமானது ஆகும். அந்த வகையில் டைரக்டர்களின் நடிகை என்று என்னை அழைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்" என்றார்.






