

'ஸ்டார்' திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை பிரீத்தி முகுந்தன், தற்போது தென்னிந்திய திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். முதல் படத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்ற அவர், தொடர்ந்து 'நாக்ஜில்லா', 'கண்ணப்பா' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
அவரது நடிப்பில் கடந்த மாதம் வெளியான 'பிளாஸ்ட்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன், அபிராமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆக்ஷன் கதைக்களத்தில் உருவான இப்படத்தில் பிரீத்தி முகுந்தன் நடித்த சண்டைக் காட்சிகள் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளன.
இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் 'பிளாஸ்ட்' படத்தில் நடித்த அனுபவம் குறித்து பிரீத்தி முகுந்தன் மனம் திறந்து பேசியுள்ளார்.
அப்போது, "பிளாஸ்ட் திரைப்படத்தைத் தேர்ந்தெடுத்தது ஒரு வழக்கத்திற்கு மாறான முடிவாகும். எனக்குப் பதிலாக வேறு எந்த நடிகை அந்த இடத்தில் இருந்திருந்தாலும், அத்தகைய கதாபாத்திரத்தில் நடிக்கத் தயங்கியிருக்கலாம் அல்லது பயந்திருக்கலாம். நான் எப்போதும் அதிரடி கதாபாத்திரங்களில் நடிக்கவே விரும்பினேன். படம் வெளியான பிறகு ரசிகர்களிடமிருந்து கிடைத்த வரவேற்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது" என்று தெரிவித்தார்.
மேலும், 'பிளாஸ்ட்' படத்திற்கு முன்பே 'இதயம் முரளி' திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானதாகவும், அந்தப் படத்தில் தனது கதாபாத்திரம் மிகவும் இனிமையானதாக இருக்கும் என்றும், 'பிளாஸ்ட்' படத்தில் நடித்த கதாபாத்திரத்திற்கு முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் ரசிகர்களை சந்திக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.