நான் அந்த நடிகையிடம் தவறாக நடக்கவில்லை - நடிகர் ஷைன் டாம் சாக்கோ வாக்குமூலம்

ஷைன் டாம் சாக்கோ நடிகை வின்சி அலோசியஸ் கொடுத்த புகார் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
கொச்சி,
பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ. இவர் தமிழில் 'பீஸ்ட், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவர் மீது மலையாள நடிகை ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்து இருந்தார். சூத்ரவாக்கியம் படத்தின் படப்பிடிப்பின்போது, ஷைன் டாம் ஷாக்கோ போதையில் தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக மலையாள நடிகை வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக பிலிம் சேம்பரில் புகாரும் அளித்து இருந்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் ஷைன் டாம் சாக்கோ.
அதாவது, கடந்த புதன்கிழமை கொச்சியில் உள்ள ஓட்டலில் போதைப்பொருள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை தேடி போலீசார் இரவில் அதிரடியாக சென்று சோதனை நடத்தினர். அப்போது ஷைன் டோம் ஷாக்கோ, தங்கியிருந்த ஓட்டலில் இருந்து தப்பி ஓடினார். அவர் தப்பித்தது ஏன்? என்பது தொடர்பாக விசாரிக்க போலீசார் அவருக்கு நோட்டீஸ் அனுப்பினர். இதனை தொடர்ந்து நேற்று காலை நடிகர் ஷைன் டாம் சாக்கோ கொச்சி வடக்கு போலீஸ் நிலையத்தில் ஆஜரானார்.
விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோவிடம் போலீசார் சரமாரியாக கிடுக்கிப்படி கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினார்கள். சம்பவத்தன்று ஓட்டலில் இருந்த போது போதைப் பொருள் எதையும் பயன்படுத்தவில்லை என்றும், தன்னை யாரோ தாக்க வருகிறார்கள் என்ற பயத்திலேயே ஓட்டலில் இருந்து தப்பிச் சென்றதாகவும் அவர் தெரிவித்தார். பின்னர் அறிவியல் பரிசோதனைக்காக அவரது தலைமுடி மற்றும் நகங்களை சேகரித்த போலீசார் அவரை ஜாமீனில் விடுவித்தனர்.
இந்த விசாரணையின் போது நடிகை வின்சி அலோசியஸ் கொடுத்த புகார் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த நடிகர் ஷைன் டாம் சாக்கோ, அந்த புகாரில் எந்த அடிப்படையும் இல்லை. இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர்களே உண்மையை சொல்லட்டும். நான் படப்பிடிப்பு தளத்தில் அந்த நடிகையிடம் தவறாக நடந்து கொள்ளவில்லை என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.






