

தவெக தலைவரும் நடிகருமான விஜய்யின் செயல்பாடுகள் குறித்து சமுத்திரக்கனி விமர்சனம் செய்து பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், அதைப் பற்றி சமுத்திரக்கனி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக சமுத்திரக்கனி கூறுகையில், “எனக்கு மனதில் ஒன்று வைத்துக்கொண்டு வெளியே ஒன்று பேசத் தெரியாது. மகிழ்ச்சியோ அல்லது வலியோ அதை அப்படியே வெளிப்படுத்திவிடுவேன். ஒரு அக்கறையும், அதனால் ஏற்பட்ட வலியும்தான் அப்படி பேசியதற்குக் காரணம். அப்படி பேசியதற்கு வருத்தப்படவில்லை என்றும், அதை குற்றமாக நினைக்கவில்லை” என்று கூறியுள்ளார்.
முன்னதாக, திருமண நிகழ்ச்சி ஒன்றில் விஜய் மற்றும் திரிஷா ஆகியோர் ஒன்றாக பங்கேற்ற காணொளி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியது. விஜய்யிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரியிருந்ததாக கூறப்படும் நிலையில், விஜய், திரிஷாவுடன் இணைந்து நிகழ்ச்சியில் பங்கேற்றதே காரணம் என பேசப்பட்டது.
அப்போது, இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி, “இதெல்லாம் விளையாட்டா? யாரை பழிவாங்க இதை செய்கிறார்? ஒரு பிரச்னை நடக்கும்போது நடிகையை கூட்டி வருகிறார். நான்கு சுவருக்குள் இதையெல்லாம் வைத்துக்கொள்ள வேண்டும். சொந்தக் கட்சிக்காரர்களே இதற்கு மேல் முட்டுக்கொடுக்க முடியாது என்று புலம்புகிறார்கள்” என்று பேசிய காட்சி வைரலானது.