எனக்கு போட்டி யாரும் இல்லை... ரஜினிகாந்தை உதாரணம் காட்டிய கீர்த்தி ஷெட்டி!

இன்றளவும் ஹீரோயினாக நான் நடிப்பது இயற்கையும், இறைவனும் தரும் ஆசிர்வாதத்தால் மட்டுமே என கீர்த்தி ஷெட்டி தெரிவித்துள்ளார்.
எனக்கு போட்டி யாரும் இல்லை... ரஜினிகாந்தை உதாரணம் காட்டிய கீர்த்தி ஷெட்டி!
Published on: 

சென்னை,

போட்டி என்பதெல்லாம் எனக்கில்லை. என் முந்தைய படங்கள் தான் எனக்கு போட்டி. என்னை பொறுத்தவரை அதிர்ஷ்டம் சில நேரங்களில் கைகொடுக்கலாம். ஆனால் அதற்காக உழைப்பை கைவிடக்கூடாது. உழைத்து கொண்டே இருந்தால் தான் பலன் நமக்கு கிடைக்கும். என்று கீர்த்தி ஷெட்டி பேசியுள்ளார்.

கர்நாடகா மாநிலம் மங்களூருவில் பிறந்த அழகு மங்கை கீர்த்தி ஷெட்டி தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலிக்கிறார். கன்னக்குழி அழகியான கீர்த்தி ஷெட்டி தமிழில் கார்த்தி ஜோடியாக 'வா வாத்தியார்'. பிரதீப் ரங்கநாதனுடன் 'எல்.ஐ.கே.' ஆகிய படங்களில் நடித்தார். தற்போது ரவிமோகனுடன் நடித்துள்ள 'ஜீனி' திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. மீண்டும் தமிழ் படங்களில் நடிக்கப் போவதாகவும் பேசப்படுகிறது.

கீர்த்தி ஷெட்டியின் திரைப்பயணம்

இதற்கிடையில், நடிகை கீர்த்தி ஷெட்டி தனது திரைப்பயணம் குறித்து பகிருகிறார். எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல் சினிமாவுக்கு வந்தவள் நான். இன்றளவும் ஹீரோயினாக நான் நடிப்பது இயற்கையும், இறைவனும் தரும் ஆசிர்வாதத்தால் மட்டுமே. தெலுங்கு சினிமாவில் நடித்தாலும் தமிழ் சினிமா பற்றிய ஆர்வம் எனக்குண்டு. காரணம், தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கண்மூடித்தனமான அன்பு தான்.

'எனக்கு நான் தான் போட்டி'

நான் யாரையுமே போட்டியாக பார்த்தது இல்லை. அந்த வார்த்தையே வேண்டாம் என்று நினைக்கிறேன். சினிமாவில் எதுக்கு போட்டி, பொறாமை. நமக்கு உண்டானதை செய்து கொண்டு போகவேண்டும். 'எனக்கு நான் தான் போட்டி' என்று ரஜினிகாந்தே ஒரு மேடையில் பேசியுள்ளார். அவ்வளவு பெரிய 'லெஜண்ட்' அப்படி பேசும்போது நாமெல்லாம் சாதாரணம். நல்ல நட்புறவுடன், அன்புடன் எல்லோருடனும் பழகும் ஆள் நான். எனவே போட்டி என்பதெல்லாம் எனக்கில்லை. என் முந்தைய படங்கள் தான் எனக்கு போட்டி. என்னை பொறுத்தவரை அதிர்ஷ்டம் சில நேரங்களில் கைகொடுக்கலாம். ஆனால் அதற்காக உழைப்பை கைவிடக்கூடாது. உழைத்து கொண்டே இருந்தால் தான் பலன் நமக்கு கிடைக்கும்.

நடிகைகளை மிரட்டும் ஏஐ

எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நடிகைகளையும் மிரட்டி வரும் விஷயம் என்றால், அது ஏ.ஐ. தொழில்நுட்பம் தான். எது உண்மை, எது பொய் என்றே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு சமூக வலைதளங்களை ஏ.ஐ. தொழில்நுட்பம் ஆட்டுவித்து வருகிறது. இது சினிமாவுக்கு மிகப் பெரிய ஆபத்து. சமீபத்தில் கூட எனக்கும் அப்படி நிலைமை ஏற்பட்டது. போலி ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களால் நடிகைகளே பதறும்போது, சாதாரண பெண்கள், கல்லூரி மாணவிகள் என்ன செய்வார்கள்? எனவே இதை தடுக்க கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.

என் கவனமெல்லாம் நடிப்பில் மட்டும் தான்

என் சினிமா பயணம் போராட்டங்கள் நிறைந்தது. வந்த புதிதில் நம்மால் இது முடியாது என்று நினைத்தேன். ஆனால் படங்களின் வெற்றியும், என் நம்பிக்கையும் மட்டுமே என்னை இங்கே தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன. ஒரு நல்ல வரலாற்று படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். அப்படி ஒரு நல்ல கதை வரும் என்று நம்புகிறேன். இப்போது என் கவனமெல்லாம் நடிப்பில் மட்டும் தான். ஒருவேளை என்னைக் கவரும் தன்மை கொண்ட, பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்ட, எல்லா நேரமும் பாசிட்டிவ் எனர்ஜி கொண்ட ஒருவர் என் வாழ்கையில் வந்தால், அவரை காதலிக்கலாம். அப்படிப்பட்ட நபரை இன்னும் நான் சந்திக்கவில்லை. என்ன நடக்கிறது? என்று பார்க்கலாம்". என்று தெரிவித்துள்ளார்.

X