நான் சினிமாவை விட்டு எங்கேயும் செல்லவில்லை - நடிகர் பரத்

ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் பரத், அஜய் கார்த்தி நடிக்கும் “காளிதாஸ் 2” படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகிறது.
நான் சினிமாவை விட்டு எங்கேயும் செல்லவில்லை - நடிகர் பரத்
Published on

‘பாய்ஸ்’ படத்தில் டீன் ஏஜ் இளைஞனாக ஸ்டைலிஷ் ஆங்கிலம் பேசியபடி நடித்து கவனம் ஈர்த்தவர் பரத். பின்னர் காதல், வெயில், பழனி, எம்டன் மகன் உள்ளிட்ட படங்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தார்.

கடந்த 2019-ம் ஆண்டு பரத் ‘காளிதாஸ்’ என்ற திரில்லர் படத்தில் நடித்து இருந்தார். போலீஸ் அதிகாரியாக நடித்த அந்தப்படம் மக்களிடையே நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. அந்தப்படத்தினை ஸ்ரீ செந்தில் இயக்கினார். அப்படத்தில் ஆன் ஷீத்தல், சுரேஷ் மேனன் மற்றும் ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். தற்போது, ‘காளிதாஸ்’ 2-ம் பாகம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தினை ஸ்கை பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் அஜய் கார்த்தி, பிரகாஷ் ராஜ், பவானி ஸ்ரீ, அபர்ணதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 25 ஆண்டுகளுக்குப் பிறகு பூவே உனக்காக சங்கீதா, இப்படத்தின் மூலம் திரும்பவும் நடித்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பரத் கலந்து கொண்டு பேசியதாவது, “என்னுடைய கரியரில் இதுவரை நிறைய படங்கள் பண்ணியிருக்கேன். அதில் நிறைய புது டைரக்டர்ஸ் இருக்கிறார்கள். ஆனால் அதில் செந்தில் சிறப்பான ஒருவர். அவ்வுளவு சின்சியரான ஆள். அதனால் அவரிடம் தைரியமாக நம்மை ஒப்படைத்துவிடலாம். ஒரு நடிகருக்கு நல்ல டைரக்டர்ஸ் கிடைத்து விட்டால் தானாகவே நமக்கான பாதை உருவாகிவிடும். எனக்கு அப்படி அமைந்த டைரக்டர் தான் செந்தில்.

சினிமாவில் எல்லா நடிகர்களுக்கும் ஏற்ற இரக்கங்கள் இருக்கும். வெற்றி படம் கொடுத்தால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். அதே இரண்டு படங்கள் தோல்வி கொடுத்தால் அதை வைத்துதான் மார்க்கெட்டை முடிவு செய்வார்கள். அப்போது மார்க்கெட் இல்லை என சொல்வார்கள். நான் சினிமவை விட்டு எங்கேயும் செல்லவில்லை. இங்கு இருக்க வேண்டும் என்பதால் தான் 23 வருஷமாக அடித்து பிடித்து ஏறி வந்துகொண்டு இருக்கிறேன். ஆனால் வியாபாரம் என வரும் போது நம்முடைய கடைசி படத்தை வைத்துதான் முடிவு செய்கிறார்கள். அந்த மாதிரி ஒரு தடுமாற்றமான கட்டத்தில் இருந்த போது எனக்கு பெரிய சப்போர்ட்டாக இருந்த படம்தான் காளிதாஸ். அதுதான் எனக்கு கம்-பேக் படமாக அமைந்தது. மேலும் ஆடியோ லாஞ்ச் என்பதை எல்லாம் ரீல்ஸில்தான் நிறைய பார்த்திருக்கிறேன். நான் நிறைய படங்கள் செய்தாலும் நிறைய படங்களுக்கு ஆடியோ லான்ச் செய்ய மாட்டார்கள். இதை சிம்பதிக்காக சொல்லவில்லை, இதுதான் ரியாலிட்டி. ஒரு கட்டத்தில் நானும் அதனைப் புரிந்துகொண்டேன். நமக்கு ஒரு நல்ல தயாரிப்பாளர் அமைந்தால்தான் இதெல்லாம் கிடைக்கும் என நினைத்தேன். இப்போது அமைந்திருக்கிறது. இந்தக் கதை தேவைக்கும் அதிகமாக கொடுத்து பிரம்மாண்டமாக்கி இருக்கிறார்கள்" என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com