

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரும், ஆந்திர பிரதேச துணை முதல்வருமான பவன் கல்யாண், தனது இளமைக்கால வாழ்க்கை குறித்து பகிர்ந்துள்ள தகவல் கவனம் பெற்றுள்ளது. சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், "எனது 17 வயதில் நக்சலைட் இயக்கத்தில் சேர்வது குறித்து தீவிரமாக யோசித்தேன். துப்பாக்கியை கையில் எடுக்க வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது. அப்போது என்னுள் இருந்த கோபம் மற்றும் அநீதிக்கு எதிரான உணர்வு தான் அந்த எண்ணத்திற்கு காரணமாக இருந்தது. நக்சலைட் ஆக வேண்டும் என்ற விருப்பம் 17 வயது முதல் 21 வயது வரை என்னுள் நீடித்தது. அந்த காலகட்டத்தில் நான் பைத்தியம் பிடிப்பது போல் இருந்தேன்" என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "அந்த நேரத்தில் என் சகோதரர் சிரஞ்சீவி என்னிடம், 'உனக்கு இந்த கோபம் எங்கிருந்து வருகிறது?' என்று கேட்டார். அதற்கு நான் அநீதிக்கு எதிராக பேசுகிறேன் என்று கூறினேன். இதைக் கேட்ட அவர் மிகவும் கவலைப்பட்டார். பின்னர், 'உன் சகோதரன் சிரஞ்சீவியாக இல்லாமல் இருந்தால், உனக்கு குடும்பப் பொறுப்புகள் இருந்திருந்தால், உன் சம்பளத்தையும் உழைப்பையும் நம்பி குடும்பம் இருந்திருந்தால், நீ இதே முடிவை எடுத்திருப்பாயா?' என்று என்னிடம் கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. நான் அமைதியாக இருந்தேன். அவரது அந்த ஒரு கேள்வியே என் சிந்தனையை மாற்றியது" என்று பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.